- நவராத்திரி பிரம்மோத்ஸவம்
- திருப்பதி
- சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
- எம்மலையான் கோயில்
- திருமலா
- திருப்பதி ஏழுமலையான் கோவில்
- சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. காலை, இரவில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் நிறைவாக நேற்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி, சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக வராக சுவாமி கோயிலுக்கு வந்தனர்.
அங்கு சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்கள் மூலம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டபடி புனித நீராடினர். இத்துடன் பிரம்மோற்சவம் நிறைவுபெற்றது. நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற்ற 9 நாட்களில் மட்டும் (15ம்தேதி முதல் 23ம் தேதி வரை) 6 லட்சத்து 24 ஆயிரத்து 284 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியலில் ₹25 கோடியே 71 லட்சத்து, 62 ஆயிரத்து, 300ஐ காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
அதேபோல் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காம்ப்ளக்சில் 10 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 12 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவு; ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி appeared first on Dinakaran.