×

திருவள்ளூர் பகுதி சாலைகளில் சுற்றித் திரியும் குதிரைகளால் விபத்து: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி சாலைகளில் தெரு நாய்கள் மற்றும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் விபத்தில் சிக்கி அடிக்கடி உயிரிழப்புகளும் நடைபெற்றுவந்தன. இதனால் சாலையில் திரியும் மாடு, நாய்களை பிடிக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருவள்ளூர் வட்டாட்சியர் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா ஆகியோர் தலைமையில், சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் திருவள்ளூர் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், சி.வி.நாயுடு சாலை, ஜெ.என் சாலை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சாலைகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக சுற்றி திரிந்த 26 மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கோ சாலையில் ஒப்படைத்தும் எச்சரிக்கை விடுத்தனர். சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவள்ளூர், ஜெ.என். சாலை மற்றும் திருவள்ளூரின் முக்கிய சாலைகளில் ஏராளமான குதிரைகள் சுற்றி திரிவதை காண முடிகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் குதிரை மூலம் யாரும் பயணம் செய்வதில்லை. குதிரையை வைத்துக்கொண்டு யாரும் எந்த தொழிலும் செய்வதும் கிடையாது. அப்படியிருக்கையில், எப்படி சாலைகளில் குதிரைகள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது என்று மக்கள் தெரியாமல் தவிக்கின்றனர். இவ்வாறு சாலையில் செல்லும் குதிரைகள் வாகனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு வரும்போது திடீரென வேகமாக ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post திருவள்ளூர் பகுதி சாலைகளில் சுற்றித் திரியும் குதிரைகளால் விபத்து: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,
× RELATED லாரியை மேடையாக்கி தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்