×

திருவாலங்காடு ஒன்றியம் என்.என்.கண்டிகை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட எதிர்ப்பு: பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டிடம், சீரமைக்கப்பட்ட பள்ளி ஆகியவை பயன்பாட்டுக்கு கொண்டு வராத நிலையில் 4 ஆண்டுகளாக குறுகிய அறையில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், என்.என்.கண்டிகை கிராமத்தில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது.

தொடக்கப்பள்ளியில் 41 மாணவ, மாணவியரும், அஙகன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். குறுகிய கட்டிடத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டு 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அக்கட்டிடத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகளும் இல்லாத நிலையில், கட்டிடம் சுற்றி செடிகொடிகள் வளர்ந்து மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலில் கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது.

அதே நேரத்தில் பள்ளி வளாகத்தில் கடந்த 2020ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாக திறக்கப்படாத நிலையில் வீணாகி வருகின்றது. மேலும் பழைய பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சீமை ஓடுகள் நீக்கப்பட்டு சிமென்ட் தளம் அமைத்து புதுப்பிக்கப்பட்டு பள்ளி செயல்படுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதாக பள்ளியை மூடி 4 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அனுமதியுடன் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.  இந்நிலையில் பள்ளியும், அங்கன்வாடி மையமும் மீண்டும் பழைய இடத்திற்கு வந்து செயல்படும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் பள்ளி வளாக இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பள்ளி வளாகத்தில் நிழலாக இருந்த இரண்டு மரங்கள் வெட்டப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதனால் பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாக திறக்கப்படாத புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் சீரமைக்கப்பட்ட தொடக்கப்பள்ளி ஆகியவை திறக்கப்பாடத நிலையில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், பள்ளி, அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டினால், மாணவர்கள் கல்வி தரம் பாதிக்கப்படுவதோடு, விளையாட இட வசதி குறைந்து, எதிர் காலத்தில் கூடுதல் வகுப்ப்றை கட்ட முடியாத நிலை ஏற்படும். இதனால், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கட்டிடம் வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் உடனடியாக பள்ளி, அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்து மாணவர்கள் கல்வி கற்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில் என்.என்.கண்டிகை கிராம இளைஞர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தற்போது பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட குழி தோண்டி அடிக்கல் நாட்டும் வேலை செய்து வருகின்றனர். கிராமத்தில் வேறு இடத்தில் அரசு நிலம் உள்ளது.

எனவே தாங்கள் உரிய விசாரணை நடத்தி ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதை தடுத்து நிறுத்தி வேறு இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அந்த மனுவில் கூறியுள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

* ஒரு டம்ளர் தண்ணீர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் குடிநீர் மேல் நிலை நீர்தேக்க தொட்டி பலவீனமடைந்து இடிந்து விழும் அபாயம் இருந்ததால், மாணவர்கள் பாதுகாப்புக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சேவை மைய கட்டிடத்திற்கு பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் இடம் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தொடக்கப்பள்ளி, மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும் சேவை மையத்தில், தண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத நிலையில், மாணவர்கள் வீடுகளிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்துச் சென்று குடிக்க வேண்டிய நிலை உள்ளது.

பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கும் போது சாப்பிட்ட பின்பு தட்டு, கை கழிவ ஒரு டம்பளர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகின்றது. இதனால், சாப்பிட்ட தட்டுகளையும் கைகளையும் சுத்தமாக கழுவ முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர். மேலும் கழிப்பிட வசதி இல்லாததால், மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி அடைகின்றனர்.

The post திருவாலங்காடு ஒன்றியம் என்.என்.கண்டிகை அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட எதிர்ப்பு: பொதுமக்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Thiruvalangadu Union NN Kandigai Govt. ,Panchayat Council ,Anganwadi ,Tiruvalangadu ,Tiruvalangadu Union NN Kandigai Government Primary School ,Dinakaran ,
× RELATED நந்தன் – திரை விமர்சனம்