×

தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் ரூ60 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு
வருகின்றன.

சென்னை: தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தமிழ்நாட்டிலுள்ள சிறு நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.30.50 கோடி செலவிலும், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆனைக்கவுண்டன்பட்டி, கருப்பூர் கிராமத்தில் ரூ.29.50 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டை 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் முதல்வர் அண்மையில் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு 19 நிறுவனங்களுடன் ரூ.7616 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய அதீத வளர்ச்சியை கருத்திற்கொண்டு 2000ம் ஆண்டு முதல்வர் கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி திறந்து வைத்தார். இது நம் மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது.  ‘பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி, சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி’ என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணத்திற்கேற்ப, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை கடந்த பிப்ரவரியில் முதல்வர் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை நேற்று முதல்வர் திறந்து வைத்தார். *தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா: தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.30 கோடியே 50 லட்சம் செலவில் தரை மற்றும் 3 தளங்களுடன் 55,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை திறந்து வைத்து, அங்கு ஹாம்லி பிசினஸ் சொலுயூசன் இந்தியா மற்றும் இன்போரியஸ் சாப்ட்வேர் டெக்னாலஜி இந்தியா ஆகிய 2 நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார். இந்த கட்டிடத்தில் 30 சதவிகித தள ஒதுக்கீடு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மினி டைடல் பூங்கா: சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஆனைக்கவுண்டன்பட்டி, கருப்பூர் கிராமத்தில் ரூ.29 கோடியே 50 லட்சம் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவில் நம்ம ஆபீஸ், ஏகேஎஸ் ஹைடெக் ஸ்மார்ட், தமிழ் ேசாரஸ், டெல்த் ஹெல்த்கேர், சொல்யூசன்ஸ், அக்சஸ் ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார். இங்கு 71 சதவிகித தள ஒதுக்கீடு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் வி.அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து எம்பி முரசொலி, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம், கலெக்டர் பிரியங்கா உள்ளிட்டோரும், சேலம் மாவட்டத்திலிருந்து எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், சேலம் கலெக்டர் பிருந்தா தேவி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் ரூ60 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mini Tidal ,Parks ,Thanjavur and ,Salem ,Chief Minister ,M. K. Stalin ,Mini Tidal Parks ,Tamil Nadu ,Chennai ,Thanjavur ,Dinakaran ,
× RELATED குஜராத் சபர்மதி ஆற்றை போல் சென்னை...