×

திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கில் ஐ.ஜி.க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார், காவல்துறையினர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதி விசாரணை நடத்தும் வகையில் மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேசை நியமித்துள்ளது. அவர் முழுமையான விசாரணை நடத்தி வருகிற 8-ந்தேதி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர்லால் 2-வது நாளாக இன்று விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த விசாரணை முடிவில் வருகிற 8-ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார். அதன் பின்னரே இந்த வழக்கு சிபிஐ வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், அஜித் குமார் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணையை எடுத்துள்ளது. சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கில் ஐ.ஜி.க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission ,IG ,Ajith ,Sivaganga ,Ajith Kumar ,Madapuram Pathirakaali Amman temple ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...