திருப்போரூர்: திருப்போரூரில் போலி மனித உரிமை ஆணையம் ஒன்றை தொடங்கி, காரில் கொடி மற்றும் பெயர் பலகைகளை பொருத்திய 3 பேரை, போலீசார் கைது செய்தனர். மேலும், 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய முட்டுக்காடு ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் ராஜேஷ். இவர், தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் சென்னை ஓஎம்ஆர் பகுதியில் சில நபர்கள் போலியாக மனித உரிமை இயக்கம், மனித உரிமை ஆணையம் போன்ற அமைப்புகளை தொடங்கி பலரை உறுப்பினராக சேர்த்துள்ளதாகவும், பலருக்கும் மாநில அளவில் பொறுப்புகளை கொடுத்து அதற்கென தனி கொடி, பெயர் பலகைகள், லோகோ போன்றவற்றை கார்களில் பொருத்திக்கொண்டு அரசு அதிகாரிகள் போன்று காரில் வலம் வருவதாகவும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து, போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுபோன்று போலியாக மனித உரிமை ஆணையம்போல் செயல்படும் நபர்கள் மீது 12 வாரங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இவர்கள் கார்களில் கொடியை பயன்படுத்தவும் கூட்டங்கள் நடத்தவும் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் போலி அமைப்பு குறித்து தாழம்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை குரோம்பேட்டை, சந்திரன் நகரில் அதன் அலுவலகம் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த அகில இந்திய பொதுச்செயலாளர் சுந்தரேசன், தாழம்பூர் அடுத்த காரணையைச் சேர்ந்த மாநில தலைவர் ருசேந்திர பாபு, பெரும்பாக்கத்தை சேர்ந்த பொருளாளர் சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில், குரோம்பேட்டையை சேர்ந்த மாநில பொதுச்செயலாளர் ஜீவரத்தினம், தாழம்பூரை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், சோழிங்கநல்லூரை சேர்ந்த மாநில இணை செயலாளர் தட்சிணாமூர்த்தி, குரோம்பேட்டையை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினரான படப்பையை சேர்ந்த தரன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.கைதானவர்களிடம் இருந்து, கொடி மற்றும் லோகோ பொருத்திய 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
The post திருப்போரூரில் போலி மனித உரிமை ஆணையம் அமைத்த 3 பேர் கைது: 5 பேருக்கு வலை appeared first on Dinakaran.