×

தேனி மாவட்டத்தில் கம்பம், ஆண்டிபட்டி, போடி ஆகிய பகுதிகளில் சாலையோரங்கள், நீர்நிலைகளில் கருவேல மரங்கள்

*முழுமையாக அகற்ற இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

கம்பம் : தேனி மாவட்டத்தில் சாலையோரங்கள், நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மரம் வளர்ப்போம் எனும் முழக்கங்கள் நாடு முழுக்க எழும் போது, மரத்தை வெட்டு எனும் முழக்கம் தமிழகத்தில் தோன்றி உள்ளது. ஆம்…. விவசாய நிலங்களில் ஆக்கிரமித்துள்ள, மண்ணை மலடாக்கும் சீமை கருவேல மரங்களை அழிக்க தமிழகத்தில் விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் குரலெழுப்பத் தொடங்கி விட்டனர்.

தமிழகத்தின் சாலை ஓரங்களிலும், கிராமங்களின் வயல் வெளிகளிலும் சகஜமாக வளர்ந்திருக்கக் கூடிய இந்த சீமைக் கருவேலம் என்னும் முள் மரம் இயற்கைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் வேளாண்மைக்கும், சுற்றுச் சூழலுக்கும், நீர்வளத்திற்கும் இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அளவிட முடியாதவை.

மெக்சிகோ, கரீபியன் தீவு, தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த சீமைக் கருவேல மரம் விறகு, அடுப்புக்கரி, வேலி போன்ற பயன்பாடுகளை முன்வைத்து சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு விதைகளாக கொண்டு வந்து தமிழகத்தில் தூவப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த சீமைக்கருவேல் மரம் வேலிகாத்தான், உடைமரம், சீமைக்கருவை, வேளிக்கருவை, டெல்லி முள், முட்செடி என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இதன் வேர் நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது.
மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இதன் வேர் 175 அடி நீளம் வளரக்கூடியதென விவசாயத்துறை அதிகாரிகளால் பதிவிடப்பட்டுள்ளது. நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றின் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது.

தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே காரணமாக இருந்துள்ளது. தமிழகத்தில் வேலியாக வந்து வினையான இதைக்களைய கடந்த சில ஆண்டுகளாக அரசு மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் எனும் மக்கள் அமைப்பு தீவிரமாக இம்மரங்களை வேரோடு அகற்றிவருகிறது. சீமைக் கருவேல மரம் அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை மாநிலமான கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு மீண்டும் இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கருவேலமரங்களை அகற்ற நிதி ஒதுக்கப்பட்டு அந்த மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கருவேலமரம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு இன்னும் அனைத்து மக்களிடமும் சென்று சேரவில்லை என்பதே உண்மை.மண்ணை மலடாக்கும் இந்த கருவேலமரங்கள் குறித்து சமூகநல, தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குப்பை அகற்றுவது, பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுவது, குளங்கள் தூர்வாருவது போன்ற சமூகசேவைகளில் ஈடுபடும் அமைப்புகள் இனி கருவேலமர ஒழிப்பில் ஈடுபட வேண்டும். நம் வருங்கால சந்ததிகளாவது வறட்சியின்றி செழுமையாக இருக்க இந்த கருவேல மரங்களை வேரோடு அகற்ற மாவட்ட நிர்வகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர் சுல்தான் இப்ராஹிம் கூறுகையில், கேரளாவில் இவை வேரோடு பிடுங்கியெறியப்பட்டு மீண்டும் வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கருவேலமரம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு இன்னும் அனைத்து மக்களிடமும் சென்று சேரவில்லை. இந்த மரங்களை அழித்தாலும் மீண்டும் முளைத்துவிடுகிறது என்று பொதுவான கருத்து மக்களிடையே உள்ளது.

முறையாக அகற்றினால் இம்மரங்கள் வளர்வதை தவிர்க்கலாம். மண்ணை மலடாக்கும் இந்த கருவேலமரங்கள் அகற்றுவது குறித்து சமூகநல, தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பயன்பாடு இல்லாத இடத்தில் நல்ல மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் சீமை கருவேலமரங்கள் முளைத்துவிடாமல் அழிக்கலாம். இந்த கருவேல மரங்களை வேரோடு அகற்றினால்தான் நம்வருங்கால சந்ததிகளாவது வறட்சியின்றி செழுமையாக இருக்க முடியும்.

பறவை கூடுகட்டாத மரம்

தமிழகத்தின் பல மாவட்டங்களின் வறட்சிக்கு சீமைக் கருவேல மரங்களே காரணமாக இருந்துள்ளது. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை இதற்கு உண்டு. பறவைகள்கூட கூடு கட்டாத ஒரே மரம் சீமைக்கருவேல் மட்டுமே. சீமைக்கருவேலமரம் அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை சீமைக்கருவேலம் எனும் வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு.

எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத மரம் சீமைக்கருவேல். இவை வாழும் இடத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது. இந்த மரம் விறகாக பயன்பட்டதே தவிர, இதன் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. பறவைகள்கூட கூடு கட்டாத ஒரே மரம் வேலிகாத்தான் மட்டுமே.

The post தேனி மாவட்டத்தில் கம்பம், ஆண்டிபட்டி, போடி ஆகிய பகுதிகளில் சாலையோரங்கள், நீர்நிலைகளில் கருவேல மரங்கள் appeared first on Dinakaran.

Tags : Gampam ,Andipatti, Bodi ,Theni ,Theni district ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால்...