×

ரூ.4000 கோடி திட்டம் வீணாகவில்லை சென்னையில் மழை நின்றவுடன் 3 மணி நேரத்தில் தண்ணீர் வடியும்: அமைச்சர் ரகுபதி பேட்டி

நாகப்பட்டினம்: ‘ரூ.4000 கோடி திட்டம் வீணாகவில்லை. சென்னையில் மழை நின்றவுடன் 3 மணி நேரத்தில் தண்ணீர் வடியும்’ என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். நாகப்பட்டினம் அருகே தெத்தி ஊராட்சியில் வடிகால்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதை அம்மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சர் ரகுபதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் எதிரொலியால் 441 வீடுகள் பாதிப்படைந்துள்ளது. இதில் 85 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

159 கால்நடைகள் இறந்துள்ளது. இதில் 85 கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இயற்கை இடர்பாடு காலங்களில் நாகப்பட்டினம் நகர பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்ட திட்டம் வீண் என சிலர் விமர்சனம் செய்கின்றனர். எந்த திட்டம் கொண்டு வந்தாலும் விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள். ரூ.4 ஆயிரம் கோடி வீணாகவில்லை. மழை ஓய்ந்தவுடன் 3 மணி நேரத்தில் மழைநீர் வடிந்து விடும். முதல்வர் தொலை நோக்கு பார்வையுடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதே போல் தான் இந்த திட்டமும். எதிர்காலத்தில் சென்னைக்கு மிகுந்த பலன் தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.4000 கோடி திட்டம் வீணாகவில்லை சென்னையில் மழை நின்றவுடன் 3 மணி நேரத்தில் தண்ணீர் வடியும்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Raghupathi ,Nagapattinam ,
× RELATED 6 சட்ட கல்லூரிகளில் 480 மாணவர்களுக்கு...