×

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பணி துவக்கம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது

ஸ்ரீ பெரும்புதூர்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில், சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்பூதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றதாகும். பகீரதன், இந்திரன், துர்வாசமுனிவர், அருணகிரிநாதசுவாமிகள் ஆகியோர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுள்ளனர். இங்கு, வந்து வழிபட்டால் திருமண பாக்கியம், சொந்த வீடு, இழந்த பதவிகள் கிடைப்பதாக ஐதீகம். அதனால் செவ்வாய், வெள்ளி, அரசு விடுமுறை நாட்களில் பக்தர்கள் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகின்றனர். சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

மூலவர் சன்னதி பழுதுபார்த்து புதுப்பித்தல், விநாயகர், சண்முகர், திரிபுரசுந்தரி அம்மன், உற்சவர் சன்னதிகள் புதுப்பித்தல், இடும்பன் கடம்பன் பைரவர் சன்னதிகள் புனரமைத்தல், கருங்கல் தரைதளம் புனரமைத்தல், வடக்கு ராஜகோபுரம் கட்டுதல், அனைத்து கோபுரங்கள் விமானங்கள் வண்ணம் தீட்டுதல் ஆகிய பணிகள் சுமார் 1.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இக்கோயிலில், வரும் 7ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் பின்புறம் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலைகளில் சிறப்பு வாய்ந்த 49 யாக குண்டத்துடன் கூடிய உத்தம பட்சம் எனும் வகையில், யாகசாலை அமைக்கும் பணி கடந்த 2 வாரங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இக்கோயிலில் நேற்று காலை கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. சுமார், 17 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலுக்கு கும்பாபிஷகம் நடைபெற உள்ளதால், வல்லக்கோட்டை கிராமத்தினர் ஆர்வத்துடன் பூஜைகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவுப்படி, காஞ்சிபுரம் இணை ஆணையர் குமரதுரை மேற்பார்வையில், கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் குழுவினர் செய்து வருகின்றனர்.

 

The post வல்லக்கோட்டை முருகன் கோயிலில் கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பணி துவக்கம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Kumbaphishek ,Ganpati Pooja ,Vallakkot Murugan Temple ,Sri Pragudur ,Kumbapisheka ,Vallakota Murugan Temple ,Subramaniya Swami Temple ,Vallakota ,Sri Prahumutur, Kanchipuram district ,Arunakirinadar ,Bakeeratan ,Indra ,Vallakkot ,Murugan Temple ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...