×

சாண்ட்விச்-ன் கதை..!

இரண்டு பிரெட் துண்டு. நடுவில் காய்கறிகள் சேர்த்த மசாலா. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் ருசியால் ஈர்க்கும் இந்த எளிய உணவுக்கு சாண்ட்விச் என பெயர் வந்ததற்கு ஒரு சுவாரஸ்ய வரலாறு இருக்கிறது. அது 18ம் நூற்றாண்டு. இங்கிலாந்தில் இன்றும் அரச குடும்பங்கள் கோலோச்சுகின்றன. சார்லஸ், டயானா என இளவரசர், இளவரசிகள் அந்தக் குடும்பத்தில் இருந்து வருகிறார்கள். உலகம் முழுக்க பிரபலம் ஆகிறார்கள்.

18ம் நூற்றாண்டில் அரச குடும்பத்திற்கா பஞ்சம்? சாண்ட்விச் என்ற ஊரில் ஜான் மான்டேக் என்ற அரச அதிகார பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் இருந்திருக்கிறார். சரியாக 1718ம் ஆண்டில் நவம்பர் 13ம் தேதி எட்வர்ட் ரிச்சர்ட் மாண்டேகு என்பவரின் மகனாக பிறந்த ஜான் மாண்டேகுதான் சாண்ட்விச் பிறக்க முழுமுதல் காரணம். ஜான் மாண்டேகு நான்கு வயது சிறுவனாக இருந்தபோது அவரது தந்தை இறந்துவிட்டார். அதன்பின்னர், அவரது தாயார் வேறு ஒருவரை மறுமணம் செய்துகொண்டு அவரைவிட்டு பிரிந்து போய்விட்டார். இதனால், ஜான் மான்டேக் தனது தாத்தாவின் ஆதரவில் வளர்ந்தார்.

அவரது தாத்தா சாண்ட்விச்சின் வழிவழியாக வந்தவர்களில் மூன்றாவது ஏரலாக (அரச பதவி) இருந்தார். ஜானுக்கு 10 வயதாக இருக்கும்போது, அவரது தாத்தா நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் ஜான் மாண்டேகுவை தனது அடுத்த வாரிசாக அறிவித்து, பட்டம் சூட்டிவிட்டு இறந்து போனார். இதனால், ஜான்மான்டேக் தனது பத்து வயதிலேயே சாண்ட்விச்சின் 4-வது ஏரலாக ஆனார்.

சிறுவயதில் அரச பதவி கிடைத்தபோதும், அவரது கல்வி சீரும், சிறப்புமாகவே தொடர்ந்தது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஈடன் மற்றும் டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றார். எவ்வளவு படித்தாலும், அரச பதவியில் இருந்தாலும் ஜானுக்கு ஒரு விசயத்தில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. உலகைச் சுற்றிப் பார்க்கும் கடல் பயணம்தான் அது. இதனால் விரும்பிய நேரமெல்லாம் கடல் பயணத்திற்கு கிளம்பிவிடுவார். அவ்வாறு செல்லும்போது சில நாடுகளில் தங்கி சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பார்.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் ஒரு வருடம் தங்கி இருந்தார் ஜான். பின்னர் இத்தாலி, கிரீஸ், கிரேக்க தீவுகள், துருக்கி, ஸ்மிர்னா, எகிப்து, மால்டா, ஸ்பெயின் மற்றும் ஜிப்ரால்டர் என கான்டினென்டல் ஐரோப்பாவை ஒரு ரவுண்டு சுற்றி வந்தார். ஐரோப்பிய பயணங்களில் இருந்து இங்கிலாந்து திரும்பியதும் கட்சி அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மாண்டேகு தனது பல்வேறு அரசாங்க பதவிகளில் மிக நீண்ட மணிநேரம் பணியாற்றினார்.

சில ஆண்டுகள் கழித்து அவருக்கு அரசியலில் சில பிரச்னைகள் எழுந்துள்ளது. இதனால் இனி அரசியல் நமக்கு அறவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார். தனது அரசியல் பொறுப்புகள் அத்தனையையும் தனது அருமை மகனிடம் ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகினார். பின்னர், அவரது பொழுதுபோக்கிற்காக சீட்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில், அவர் சீட்டாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டார். இதனால் மணிக்கணக்கில் சீட்டு விளையாடத் தொடங்கினார்.

இடையில் சாப்பிடுவதற்காகக் கூட ஆட்டத்தை நிறுத்தவில்லை.ஜானுக்கு உப்பு கலந்து வேகவைத்த இறைச்சி மிகவும் பிடிக்கும். எனவே, அவர் தனது ஊழியரிடம் இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவே சமைத்த இறைச்சியை வைத்து கொடுக்கும்படி கூறினார். அதன்மூலம் அவர் கை கழுவ வேண்டிய அவசியமில்லாமல், இடையில் நிறுத்தாமல் சீட்டாட்டத்தைத் தொடர முடிந்தது.

அவரது ஊழியரும் அவ்வப்போது, இரண்டு பிரெட் துண்டுகளுக்கு இடையில் இறைச்சி வைத்து தருவதை வழக்கமாக்கினார். ஜான் ருசித்த இந்த புதிய உணவை, அவருடன் சீட்டாட்டத்தில் ஈடுபட்டவர்களும் ருசிக்கத் தொடங்கினர். அவர்களுக்கும் அதன் ருசி பிடித்துப்போக, இந்த புதிய உணவு வெளி உலகத்துக்கும் பரவத் தொடங்கியது. இந்த புதிய உணவை சாப்பிட விரும்பிய பலரும், ஜான் மான்டேக்கின் ஊர்ப் பெயரான சாண்ட்விச்சை குறிப்பிட்டு, அதுபோல தங்களுக்கும் பிரெட் துண்டுகள் தயாரித்து தரவேண்டும் என்று உணவகங்களில் கேட்க ஆரம்பித்தனர்.

இதனால் அந்த உணவு இங்கிலாந்தில் வெகுவாக பிரபலம் ஆனது. ஜான் பிறந்த ஊரான சாண்ட்விச்சே அந்த புதிய உணவிற்கு பெயராகிவிட்டது. இங்கிலாந்தில் பிறந்து பிரபலமான சாண்ட்விச் தற்போது உலகம் முழுதும் பிரபலம் ஆகியிருக்கிறது. குறைந்த செலவில் ஒரு நல்ல எளிமையான உணவை சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு சிறந்த சாய்சாக சாண்ட்விச் மாறி இருக்கிறது. உடலுக்கு நல்ல உணவாக சாண்ட்விட்ச் அமைந்துவிட்டதால், தற்போது, உலக மக்கள் அனைவராலும் விரும்பும் ஒரு உணவாகவும் சாண்ட்விச் மாறிவிட்டது.

தற்போது அமெரிக்காவில் மட்டும் தினசரி 3 கோடி சாண்ட்விச்கள் சாப்பிடப்படுகின்றனவாம். அதாவது, சராசரியாக ஒரு மனிதர் தினசரி ஒரு சாண்ட்விச்சுக்கு மேல் சாப்பிடுகிறார் என்றும், இங்கிலாந்தில் ஒவ்வோர் ஆண்டும் 180 கோடிக்கு மேல் சாண்ட்விச்கள் கடைகளில் வாங்கப்படுகின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற நாடுகளிலும் ஏறக்குறைய இந்த கணக்கையே தொடுகிறது சாண்ட்விச் விற்பனை. இதில் வீடுகளில் தயாரிக்கப்படும் சாண்ட்விச்கள் தனி கணக்கு.

– தேவி

சென்னையில் சாண்ட்விச்

தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள பேக்கரிகளில் சாண்ட்விச் விற்பனை களைகட்டுகிறது. பல நேரங்களில் இது நொறுக்குத்தீனியாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் சிலர் மதிய உணவாகக் கூட பயன்படுத்துகிறார்கள். அதிக இனிப்பு இல்லை, காய்கறிகள் இருக்கிறது என்பதால் சர்க்கரை உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்களும் சாண்ட்விச்சை அதிகம் விரும்புகிறார்கள். சென்னையில் உள்ள பேக்கரிகளில் சாண்ட்விச் நிச்சயம் தினசரி டிஷ்ஷாக இடம்பிடிக்கிறது. சில இடங்களில் தனியாக பிரெட் ஆம்லெட் போடும் கடைகளிலும் பிரெட் சாண்ட்விச் விற்பனை ஜரூராகப் போகிறது.

வெஜ் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 பொடியாகநறுக்கியது
தக்காளி – 1 நறுக்கியது
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
பாவ் பாஜ் மசாலா – ½ டீஸ்பூன்
சீரகப் பொடி – ½ டீஸ்பூன்
கேரட், குடைமிளகாய்,
மஞ்சள் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
உருளைக்கிழங்கு – 2 உப்பு போட்டு
வேகவைத்து மசித்தது
சாட் மசாலா – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு நறுக்கியது
ப்ரெட் – தேவையான அளவு.

செய்முறை

ஒரு பானில் வெண்ணெய் ஊற்றி உருகியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து தக்காளி குழைய வதக்க வேண்டும். வதங்கியதும் அதில் மிளகாய் தூள், சீரக தூள், பாவ் பாஜ் மசாலா சேர்த்து மசாலா வாசனை போக நன்கு வதக்கிக்கொள்ளவும். பிறகு நறுக்கிய கேரட், குடை மிளகாய் சேர்த்து வேகும் அளவிற்கு வதங்கி வர வேண்டும். அதில் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 2 அல்லது 3 நிமிடம் அப்படியே வதக்கவும். வெந்ததும் அடுப்பை நிறுத்தி சாட் மசாலா சேர்த்து கலந்துவிடவும். பின்னர் பிரட்டில் வெண்ணெய் இரு பக்கமும் தடவி செய்து வைத்துள்ள மசாலாவை ஸ்டப் பண்ணி தோசைக்கல்லில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பிரெட்டை போட்டு இரு பக்கமும் திருப்பிப்போட்டு வேக விடவும். இப்பொழுது சுவையான வெஜ் சாண்ட்விச் ரெடி.

The post சாண்ட்விச்-ன் கதை..! appeared first on Dinakaran.

Tags : Sandwych ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!