×

ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தம்

ஈரோடு: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தா வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. இதுதவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.

தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளி சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை நடைபெற்றது. கடந்த 2 மாதங்களாக ரம்ஜான் மற்றும் உள்ளூர் திருவிழாக்கள் காரணமாக ஜவுளி விற்பனை அதிகரித்திருந்தது.

அதன்பின் கடந்த சில வாரங்களாகவே வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாததால் மொத்த வியாபாரம் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. கோடை காலம் தொடங்கியதை முன்னிட்டு உள்ளூர் வியாபாரிகள் வருகை மட்டுமே இந்த வாரம் அதிக அளவில் இருந்தது. ஆண்கள், பெண்களுக்கான காட்டன் ரக துணிகள், துண்டுகள், நைட்டி, லுங்கி மற்றும் உள்ளாடைகள் என சுமார் 30% அளவில் சில்லறை விற்பனை மட்டுமே நடைபெற்றது. ஆந்திரா, கர்நாடக, கேரள மாநில மொத்த வியாபாரிகள் இந்த வாரமும் குறைந்த அளவிலேயே வந்திருந்ததால் மொத்த வியாபாரமும் மிகவும் மந்தமாகவே காணப்பட்டது. சுமார் 10% அளவில் மட்டுமே வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்த வாரங்களில் பள்ளி சீருடைகள் மற்றும் கோடை காலத்தையொட்டி காட்டன் ரக துணிகள் விற்பனையால் ஜவுளி விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Gani Market Textile Commercial Complex ,Panirselvam Park ,Manikoondu Road ,D. V. S. Road ,Iswaran Temple Road, N. M. S. ,Compound ,Kamarajar Road ,Brintha Road ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்