×

சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இரவிலும் விமானங்கள் சோதனை ஓட்டம்

மீனம்பாக்கம்: சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையத்தில், பகலில் மட்டும் சோதனை ஓட்டம் நடந்தது. தற்போது, இரவு, அதிகாலை நேரங்களிலும் நடைபெறுகிறது. சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச ஒருங்கிணைந்த புதிய விமானம் முனையம் முதல் ஃபேஸ் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 8ம் தேதி திறந்து வைத்தார். ஏற்கனவே உள்ள சென்னை விமான நிலையத்தில், ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். இனி 30 மில்லியன் பயணிகள், பயணிப்பதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முனையம் அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன், பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 100 கவுன்டர்கள், குடியுரிமை சோதனைக்காக 108 கவுன்டர்கள், பயணிகள் உடமைகள் வரும் கன்வயர் பெல்ட்கள் 6, அதிநவீன லிப்ட்டுகள் 17, எஸ்கலேட்டர்கள் 17, வாக்கலேட்டர்கள் 6, பயணிகள் உடைமைகள் பரிசோதனை அதிநவீன கருவிகள் 3 அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் விமான நிலைய ஓடுபாதை, விமானம் நிறுத்தும் இடம், டாக்ஸி வே போன்றவைகளும் புதுப்பிக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்டுள்ளதால், விமானங்கள் புறப்படுவதற்கு முன்பு ஓடுபாதையில், காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தில், முதல் சோதனை ஓட்டம், கடந்த ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 146 பயணிகளுடன் சென்னை வந்த யு.எஸ் பங்களா ஏர்லைன்ஸ் விமானம், முதல் விமானமாக புதிய முனையத்தில் தரை இறங்கியது. அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில், மேலும் சில அபிவிருத்தி பணிகள் செய்யப்பட்டன. பின்பு இந்த மாதம் 3ம் தேதி 3 விமானங்கள் சோதனை அடிப்படையில், புதிய முனையத்தில் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், குவைத் செல்லும் விமானங்களும், சிங்கப்பூரில் இருந்து சென்னை வரும் விமானமும் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் சில விமானங்கள் இந்த புதிய முனையத்தில், சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டன. ஆனால் சிறிய ரக விமானங்களான ஏர் பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737, 738 விமானங்கள் மட்டுமே, சோதனை அடிப்படையில் புதிய ஒருங்கிணைந்த முனையம் வந்து சென்றன.

அது வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது நடுத்தர ரக மற்றும் பெரிய ரக விமானங்களும் குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கும் சோதனை முறையில் இயக்கப்படுகின்றன. பகல் நேரங்களில் மட்டுமே நடந்த விமான சோதனை ஓட்டம், தற்போது நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும், புதிய இணையத்தில் நடக்கின்றன. அதன்படி இன்று அதிகாலை 1.15 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னை புதிய முனையத்திற்கு சோதனை அடிப்படையில், ஜாஜுரா ஏர்லைன்ஸ் விமானம் வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும் அதிகாலை 3.30 மணிக்கு குவைத் புறப்பட்டது. இதைப்போல் இம்மாத 3வது வாரம் வரையில், சோதனை அடிப்படையில் பல்வேறு ரக விமானங்கள், புதிய முனையத்திற்கு வந்து செல்ல இருக்கின்றன. இம்மாத இறுதிக்குள், புதிய முனையத்தில் சோதனை ஓட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்துவிடும். ஜூன் முதல் வாரத்தில் இருந்து, புதிதாக திறக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தில், முழு அளவிலான, வழக்கமான சர்வதேச வருகை, புறப்பாடு விமானங்கள் அனைத்தும் இயக்கப்பட இருக்கின்றன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தில் இரவிலும் விமானங்கள் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meenambakkam ,
× RELATED சென்னை விமானநிலையத்திற்கு 5வது...