புதுடெல்லி: மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்தில், மோடி அரசின் வரி விதிப்பை எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையாக விளாசிப் பேசினர். மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், ஷிரோமணி அகாலிதளம் எம்பி ஹர்சிம்ரத் பாதல் பேசுகையில், ‘‘பணம் சம்பாதித்தாலும் வரி செலுத்த வேண்டும், செலவழித்தாலும் வரி செலுத்த வேண்டும், பணத்தை சேமித்தாலோ முதலீடு செய்தாலோ அதற்கும் வரி செலுத்த வேண்டும், வரி செலுத்தினால் செஸ் வடிவில் வரிக்கு வரி செலுத்த வேண்டும். இளைஞரோ, முதியவரோ, ஏழையோ, பணக்காரரோ அனைவரும் வரியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அப்படியிருக்கும் போது இதை ஏன் நிதி மசோதா என்கிறீர்கள். 140 கோடி இந்தியர்களையும் சிக்க வைக்கக் கூடிய யாரையும் காப்பாற்றாத ‘வரி பொறி மசோதா’ என பெயரிடுங்கள். ஆனால் இந்த மசோதா நிச்சயமாக கார்ப்பரேட்களுக்கு மிகவும் சாதாகமாக உள்ளது. ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பது மிகப்பெரிய வரி பயங்கரவாதம்’’ என்றார்.
காங்கிரஸ் எம்பி ஷபி பரம்பில் பேசுகையில், ‘‘வரி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தேவைகளை புறக்கணிக்கும் ஒன்றிய அரசு கார்ப்பரேட்களுக்கு அதிக சாதகமாக இருக்கிறது. இந்த அணுகுமுறை அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு வழிவகுக்கும்’’ என்று எச்சரித்தார்.
திமுக எம்பி கலாநிதி வீராசாமி பேசுகையில், ‘‘வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கும் விஷயத்தில் ஒன்றிய அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை தன்னை காப்பாற்றிக் கொள்ள போராடி வருகிறது. ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன’’ என்றார்.
காங்கிரஸ் எம்பி ஆர்.சுதா பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்விக்கு ஒன்றிய அரசு தனது பங்கு நிதியை ஒதுக்கவில்லை’’ என்றார்.
மகாராஷ்டிராவின் சாங்லி தொகுதி சுயேச்சை எம்பி விஷால் பிரகாஷ்பாபு பாட்டீல் பேசுகையில், ‘‘குழந்தை பருவத்தில் ராபின்ஹூட் கதைகளை படித்திருப்போம். அவர் பணக்காரர்களிடம் பணத்தை கொள்ளையடித்து ஏழைகளுக்கு தருவார். ஆனால் இங்கு தலைகீழ் ராபின்ஹூட் நிர்வாகம் நடக்கிறது’’ என்றார். இதன்பின்னர், 45 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதம் தொடரும்.
* மூலதன ஆதாய வரியில் பணிந்தது ஒன்றிய அரசு
சொத்துக்கள் விற்பனையில் நீண்ட கால மூலதன ஆதாய வரியில், மக்களுக்கு பலன் அளிக்கும் இன்டெக்சேஷன் சலுகையை நீக்கிவிட்டு, வரி விதிப்பை 20 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைத்து ஒன்றிய அரசு நிதி மசோதாவில் திருத்தம் செய்தது. இது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நிதி மசோதாவில் முக்கிய திருத்தம் செய்யப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார். அதாவது, விற்கப்படும் சொத்துக்கள் ஜூலை 23, 2024க்கு முன் பதிவு செய்யப்பட்டிருந்தால் பழைய முறைப்படி இன்டெக்சேஷன் சலுகையுடன் 20 சதவீத நீண்டகால மூலதன ஆதாய வரி செலுத்தலாம் அல்லது புதிய முறைப்படி இன்டெக்சேஷன் இல்லாமல் 12.5 சதவீத வரியை செலுத்தலாம். இதன் மூலம் மீண்டும் பழைய நடைமுறை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
* காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி ஏன்?
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியம்கள் மீதான ஜிஎஸ்டியை எம்பிக்கள் நீக்கக் கோரியது குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், ‘‘ஜிஎஸ்டியில் 75 சதவீதம் மாநில அரசுகளுக்குத்தான் செல்கிறது. ஜிஎஸ்டி வருவதற்கு முன், அனைத்து மாநிலங்களும் இன்சூரன்ஸ் பிரீமியத்திற்கு வரி விதித்து வந்தன. அதன் அடிப்படையில்தான், ஜிஎஸ்டி அமல்படுத்திய போது, 18 சதவீத வரி கொண்டு வரப்பட்டது. பிரீமியம்களுக்கு வரி என்பது புதிதான ஒன்றல்ல’’ என்றார்.
The post எதற்கெடுத்தாலும் வரி, வரி செலுத்தினாலும் வரி நிதி மசோதா அல்ல… வரி பொறி மசோதா: மக்களவையில் எதிர்க்கட்சிகள் விளாசல் appeared first on Dinakaran.