சென்னை:தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை காலையும், மாலையும் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை வரும் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கும். மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு வரும் 20ம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி அன்றைய தினம் பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். அதைத்தொடர்ந்து வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடும். இந்த நிலையில் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபை நிகழ்வுகளை காலை 9.30 மணிக்கு தொடங்குவது தொடர்பாக விதிகள் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை கூடியதும் விதிகள் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும். அதையடுத்து வரும் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை காலை 9.30 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கும். வரும் 29ம் தேதி தவிர மற்ற நாட்களில் காலை, மாலை என 2 பிரிவுகளாக கூட்டம் நடக்கும். காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சட்டசபை கூட்டம் நடக்கும்.
ஏற்கனவே 1996, 2006 காலக்கட்டங்களில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் தேதி அறிவித்த காரணத்தால்தான் சட்டசபை கூட்டத் தொடரை முன்கூட்டியே தொடங்கி காலை, மாலை என இரு வேளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அதிமுக, பாஜ, காங்கிரஸ் என எல்லா கட்சிகளும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. அப்போதே இந்த இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்தியிருக்கலாம். இப்போது விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், அந்த மாவட்டத்துக்கு எந்த திட்டத்தையும் அறிவிக்க முடியாத நிலை உள்ளது. மானியக் கோரிக்கை மசோதா 8 நாள் மட்டும்தானா என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு முன்பு 2004ம் ஆண்டு இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இதே சபையில் மானியகோரிக்கை மீதான விவாதம் வெறும் 6 நாட்கள் மட்டும் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழக சட்டப்பேரவை கூட்டம் 20ம் தேதி முதல் 29 வரை காலையும், மாலையும் நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு தகவல் appeared first on Dinakaran.