×

தமிழ்நாட்டில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன; மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன; மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

மதுபான தானியங்கி இயந்திரம் பற்றி தவறான தகவல்:

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் வழங்கும் வசதி எந்த இடத்திலும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வணிகவளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எலைட் மதுபான கடைக்குள் மட்டுமே எந்திரம் உள்ளது. வணிகவளாகத்தில் மதுபான தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறானது.

எலைட் மதுபான கடையில் விற்பனையாளர் முன்னிலையில் மட்டுமே மது தரும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதி ஏற்கனவே அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. எலைட் கடையில் உள்ள தானியங்கி மதுபான இயந்திரம் 24 மணிநேரமும் செயல்படவில்லை. ஏ.டி.எம். இயந்திரத்தோடு மதுபான தானியங்கி இயந்திரத்தை ஒப்பிடுவது தவறு என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

அதிமுக ஆட்சியில்தான் மால்களில் மதுக்கடை திறப்பு:

வணிகவளாகங்களில் மதுபான கடைகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது அதிமுக ஆட்சியில்தான் என்று அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது தானியங்கி மதுபான இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கடையானது 2019-ல் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மதுபான வருமானத்தை பயன்படுத்தவில்லையா? என பழனிசாமிக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த அறிவிப்புமின்றி 96 கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மூடப்பட உள்ள 500 மதுபான கடைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் அரசியலுக்காக மதுவிலக்கு வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோருவோர் அகில இந்திய அளவில் கோரிக்கையை முன்வைக்காதது ஏன்? எனவும் சாடினார். எலைட் கடையில் மதுபான நிறுவனங்கள்தான் தானியங்கி இயந்திரங்களை நிறுவுகின்றன என்றும் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 1,977 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன; மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,96 Tasmak ,Tasmac ,Minister ,Senthil Balaji ,Chennai ,Tasmak ,96 Tasmac ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...