திண்டுக்கல்: தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறியதால் சிரிப்பலை ஏற்பட்டுள்ளது. காய்கறிகள் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை குறைக்க கோரி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை குறைக்கக்கோரி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று வாய்தவறிப் பேசினார்.
திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ந்து போயினர். பின்னர், திண்டுக்கல் சீனிவாசனின் காதுகளில் முணுமுணுக்க, உளறியதை சுதாரித்துக்கொண்டு தான் மாற்றி சொல்லிவிட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் நத்தம் விசுவநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். ஸ்டாலினை முதல்வராக்குவோம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறிய வீடியோ தற்போது வெளியாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
The post தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடத்தினால் ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்: திண்டுக்கல் சீனிவாசன் உளறல் பேச்சு.. அதிமுகவினர் பதற்றம்..!! appeared first on Dinakaran.