×
Saravana Stores

தமிழகம் முழுவதும் உள்ள 68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச்சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச்சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சந்தித்து துரை வைகோ வலியுறுத்தினார். மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்களுக்கு, சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றைச் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, துரை வைகோ அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் என்னை சந்தித்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த குளறுபடியால் தமிழகம் முழுவதும் உள்ள ஊராளிக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், பிறமலைக் கள்ளர், மறவர், அம்பலகாரர், வலையர், தொட்டிய நாயக்கர், போயர், குறவர் உள்ளிட்ட சீர்மரபினரான 68 சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றிய அரசு உரிமைகளைப் பெறுவதற்கு ‘சீர்மரபு பழங்குடியினர்’ எனவும், மாநில அரசு உரிமைகளை பெறுவதற்கு ‘சீர்மரபு வகுப்பினர்’ எனவும் ‘இரட்டை சாதிச்சான்றிதழ்’ வழங்கும் அநீதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையைப் போக்கிட, தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்கள் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது, சீர்மரபு பழங்குடியினர் என ஒற்றைச் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். எனவே, இச்சமூக மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக அதிகாரிகளை அழைத்து, முதல்வரும் இது சம்பந்தமாக ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி அளித்து இருக்கிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, மதிமுக தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கே.கழககுமார், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயசீலன் மற்றும் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post தமிழகம் முழுவதும் உள்ள 68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச்சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Durai Vaiko ,minister ,CHENNAI ,Rajakannappan ,Madhyamik ,Principal Secretary ,Department of Backward Welfare and Higher Education Department ,Dinakaran ,
× RELATED மதிமுக தணிக்கை குழு உறுப்பினர் மறைவுக்கு துரை வைகோ நேரில் ஆறுதல்