×

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்

புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே மும்பையில் 107 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது. இதற்கு முன்னர் 1918ல் பருவமழை தொடங்கிய முதல் நாளில் அதிக மழை பெய்திருந்தது. 107 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பருவமழை தொடங்கிய நாளில் மும்பையில் அதிக அளவு மழை பெய்துள்ளது. மும்பை கொலபாவில் நேற்று 29.5 செ.மீ. மழை பதிவு; 1918ல் 27.9 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரம் முன்பாக கடந்த 24-ம் தேதியே தொடங்கியது. அடுத்த நாளே பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவைத்தால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கர்நாடகாவில் 2 வாரம் முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடலோர பகுதிகள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் கர்நாடகா தலைநகர் பெங்களூருவுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை முடங்கியது: மும்பையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளான குர்லா, சியான், தாதர், பரேல் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல்வேறு சாலைகள், சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. புறநகர் ரயில் சேவை, வெளி மாநிலங்களுக்கான ரயில்சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 250 விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.மும்பைக்கும், தானே, ரத்னகிரி, ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மே 30 முதல் ஜூன் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்றும், நாளையும் கோவை மாவட்ட மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 29-ம் தேதி கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ., மேல் பவானியில் 30 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்கள் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : NADU ,New Delhi ,Kerala ,Karnataka ,Maharashtra ,Indian Meteorological Survey ,Tamil Nilaghi ,Goa ,Tamil Nadu ,
× RELATED சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் ‘ஏஐ’...