×

உலகிலேயே பழமையான மொழி தமிழ் தான்.. இதைவிட என்ன பெரிய பெருமை இருக்க முடியும் : பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு

பாரீஸ் : உலகிலேயே பழமையான மொழி தமிழ் தான் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பாரீசில் இன்று பாஸ்டில் தின அணிவகுப்பு நடக்க உள்ளது. இதில் கவுரவ அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார்.இதை ஏற்று, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று பாரீஸ் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் பிரான்ஸ் பயணத்தை தொடர்ந்து, அந்நாட்டிடம் இருந்து ரூ.85 ஆயிரம் கோடியில் 26 ரபேல் போர் விமானங்கள் மற்றும் 3 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனிடையே அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகிலேயே மிக பழமையான மொழி தமிழ் தான் என்றும் உலகின் பழமையான மொழி இந்தியாவில் உள்ளது எனும் போது இதைவிட என்ன பெரிய பெருமை இருக்க முடியும் எனக் கூறினார்.இந்தியாவில் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் யுபிஐ தொழில்நுட்பத்தை பிரான்ஸ் நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ள மோடி, வரும் நாட்களில் இது ஈபிள் கோபுரத்தில் இருந்து தொடங்கும் எனவும் அப்போது இந்திய சுற்றுலா பயணிகள் ரூபாயில் பணத்தை செலுத்த முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடி தனது உரையின் போது, “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” – எனும் திருக்குறளை குறிப்பிட்டு, இந்திய பொருளாதார உயர்வுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கும் முக்கியம் என குறிப்பிட்டு பேசினார். மேலும் பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி அந்த விழாவில் குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட இருக்கும் வரலாற்று நிகழ்வையும் உலகம் பார்த்துக் கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

The post உலகிலேயே பழமையான மொழி தமிழ் தான்.. இதைவிட என்ன பெரிய பெருமை இருக்க முடியும் : பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,France ,Paris ,PM Modi ,
× RELATED உருவ கேலியை உடைத்தெறிந்து பாராலிம்பிக்கில் சாதித்த தீப்தி ஜீவன்ஜி!