×

விமானப்படை சாகச நிகழ்ச்சி; பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்துக்கழகம்!

சென்னை: இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் ஞாயிறு அன்று (6-10-24) விமானப்படை சாகச நிகழ்வுகளை காண வரும் பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு. 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்வுகளை காண வரும் பொதுமக்களின் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 8:00 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும், அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் (Small Bus) இயக்கப்பட உள்ளது.

அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகளும், அதேபோல், டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம்.தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த பேருந்து வசதியினை பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

The post விமானப்படை சாகச நிகழ்ச்சி; பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்துக்கழகம்! appeared first on Dinakaran.

Tags : Municipal Transport Corporation ,Chennai ,Municipal Transport Association ,Anna Square ,Air Force Adventure ,Indian Air Force Day ,
× RELATED வரும் 21ம் தேதி முதல் மூத்த...