×

தமிழ் புத்தாண்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என உறுதிமொழி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்

சென்னை: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு, அதனை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து அனைத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையினை செயல்படுத்தி வருகின்றது. இவற்றில் பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளின் தடையினை அளவு மற்றும் தடிமன் வரையறையின்றி, தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது. தடையாணையில் குறிப்பிட்டுள்ள பொருட்களை கையாள்வதற்கும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்கை தயாரிப்பதோ, விற்பனை செய்வதோ மற்றும் விநியோகிப்பதோ தமிழக அரசின் தடை அறிவிப்பை மீறும் குற்ற செயலாகும். ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு, தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட தடையை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை குறிப்பாக பிளாஸ்டிக் கைப்பைகளை எந்த நிலையிலும் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்பதனை தமிழக அரசு வலியுறுத்துகிறது. எனவே, நமது பூவுலகம் எதிர்கொள்ளும் பெரும் அச்சுறுத்தலை அகற்றுவதற்கு பொறுப்புள்ள குடிமகனாக, இத்தமிழ் புத்தாண்டில் ‘‘ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்’’ மற்றும் ‘‘சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்துவோம்’’ என உறுதிமொழி மேற்கொள்வதோடு, அதை உறுதியுடன் பின்பற்றுவோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ் புத்தாண்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என உறுதிமொழி: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Pollution Control Board ,Tamil New Year ,Chennai ,Tamil Nadu Pollution Control ,Tamil Nadu ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி...