×

கிளாஸ் எடுக்க சொன்னா… சேலை எடுக்குறாங்கப்பா… பக்காவாக வீடியோ எடுத்த மாணவர்கள்

ஈரோடு, திருச்செங்கோடு பகுதி சேலை வியாபாரிகள் அரசு பள்ளி ஆசிரியைகளை குறிவைத்து பள்ளிக்கு நேரடியாக சென்று ஆசிரியைகளுக்கு குறைந்த விலையிலும், தவணை முறையிலும் விற்பனை செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஒரு சேலை வியாபாரி வந்தார். அவர் ஒரு ஆசிரியையிடம் சேலைகளை காட்டினார். டிசைன்கள் நன்றாக இருந்ததால் அனைத்து ஆசிரியைகளுக்கும் தகவல் கொடுத்தார். உடனே வகுப்பு நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு சேலை வாங்கும் ஆர்வத்தில் வியாபாரி இருக்கும் இடத்தை நோக்கி ஆசிரியைகள் ஓட்டம் பிடித்தனர். சேலைகளை ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு எடுக்க துவங்கினர்.

அனைத்து வகுப்புகளிலும் மாணவர்களின் சத்தம் அதிகமாக இருப்பதை கவனித்த தலைமை ஆசிரியை தேன்மொழி வெளியே வந்து பார்த்தபோது ஆசிரியைகள் சேலை எடுப்பதில் ஆர்வமாக இருந்தது தெரிந்தது. உடனே அவர் ஆசிரியைகளிடம், ‘‘பாடம் நடத்தும் நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது’’ என்று அறிவுறுத்தினார். ‘‘பாடம் நடத்தும் வேலையை பாருங்கள்’’ என்று ஆசிரியைகளை எச்சரித்த அவர், ‘‘வகுப்புகள் நடக்கும் நேரத்தில் இங்கு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்’’ என சேலை வியாபாரியை எச்சரித்து அனுப்பினார். வகுப்பு நேரத்தில் ஆசிரியைகள் சேலை எடுப்பதில் போட்டி போடுவதை செல்போனில் வீடியோ எடுத்த மாணவர்கள் அதை பெற்றோருக்கு அனுப்பியுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

The post கிளாஸ் எடுக்க சொன்னா… சேலை எடுக்குறாங்கப்பா… பக்காவாக வீடியோ எடுத்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Erode, ,Tiruchengod ,
× RELATED கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல்...