×

மீண்டும் களைகட்டிய தைலாபுரம் தோட்டம் தொகுதிகளை பிரித்து கூடுதல் மாவட்ட செயலாளர் நியமனம்: பாமக பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் தீவிரம்

திண்டிவனம்: அனைத்து மாவட்டங்களிலும் தொகுதிகளை பிரித்து கூடுதல் மாவட்ட செயலாளர்களை நியமிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாமகவில் தந்தை, மகன் மோதல் தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் பேட்டியளித்த ராமதாஸ், கட்சி பிரச்னைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு மழுப்பலாக பதில் அளித்தார். இதனால் பாமகவில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்க வந்த ஏராளமான நிர்வாகிகளால் தோட்டம் பரபரப்பானது.

இதனை தொடர்ந்து அன்புமணிக்கு எதிராக நேற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்ந்தது. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளராக உளுந்தூர்பேட்டை இளவனாசூர்கோட்டையைச் சேர்ந்த பி.கே.ஜெகன் என்பவரை நியமனம் செய்தார். இங்கு ஏற்கனவே மாவட்ட செயலாளர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. மேலும், ஏற்கனவே கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கோ.ஜெகன், கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கோபிநாத் ஆகியோர் நேற்று நியமன ஆணையை பெற்று சென்றனர்.மேலும் அன்புமணிக்கு ஆதரவாக உள்ள சென்னை மண்டலத்தில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்களை கூண்டோடு மாற்றும் திட்டத்தில் ராமதாஸ் இருப்பது தெரியவந்துள்ளது. வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி ஒப்புதலுடன் இந்த நடவடிக்கையை ராமதாஸ் எடுத்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் 108 மாவட்ட செயலாளர்கள் பாமகவில் உள்ள நிலையில், தொகுதிகளை பிரித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூடுதலாக ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்கும் திட்டத்தில் ராமதாஸ் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம் பொதுக்குழுவில் தனி பெரும்பான்மை உருவாக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். மேலும் அன்புமணியின் இரண்டு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் நீக்கப்படுவார் என பரபரப்பாக செய்திகள் வெளியாகிய நிலையில் நேற்று ராமதாசை சந்திக்க கையில் பையுடன் அவர் வந்தார். மேலும், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பாமக முன்னாள் தலைவர் தீரன், ராமதாசின் மூத்த மகள் காந்திமதி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வந்தவாசி முன்னாள் எம்பி துரை ஆகியோரும் நேற்று ராமதாசை சந்தித்து பேசினர்.

* ‘செயல்படாதவர்களை மட்டுமே நீக்குகிறார்’
பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசிவிட்டு வெளியில் வந்த முன்னாள் மாநில தலைவர் தீரன் அளித்த பேட்டி: மகளிர் மாநாட்டு பணிகளை மேற்கொள்ள நிர்வாகிகள் நியமிப்பது குறித்து பேசினோம். சரியாக செயல்படாதவர்களை தான் ராமதாஸ் நீக்கி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்கிறார். கட்சி பைலாவின் படி மாநில பொருளாளராக ஓர் சிறுபான்மையினர் இருக்க வேண்டும் என்று இருப்பதால் மன்சூரை ராமதாஸ் நியமனம் செய்தார். தலைவர், செயலாளர், பொதுச்செயலாளர் என அனைவரும் நிறுவனர் வழிகாட்டுதலின்படி தான் நடக்க வேண்டும். கட்சியின் முழு அதிகாரம் நிறுவனரிடம் உள்ளதாக பைலாவில் உள்ளது. வேகமாக செயல்படத்தான் அன்புமணியை செயல் தலைவர் என்று ராமதாஸ் சொல்கிறார். விரைவில் அன்புமணி, ராமதாசை சந்திப்பார். அவருக்கு எந்த ஈகோவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மீண்டும் களைகட்டிய தைலாபுரம் தோட்டம் தொகுதிகளை பிரித்து கூடுதல் மாவட்ட செயலாளர் நியமனம்: பாமக பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ramadas Divaram ,Palamaka General Assembly ,Dindivanam ,Ramadas ,Bhamaka ,Thailapuram Garden ,Pamagavil ,Ramadas Deviram ,Dinakaran ,
× RELATED கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி;...