×

உள்ளூர் மக்களின் உணர்வுகளுடன் ரூ.100 கோடியில் நவீனமயமாக்கப்பட்ட சூலூர்பேட்டை ரயில் நிலையம்

* பிரதமர் திறந்து வைத்தார்

* அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

திருப்பதி : ஆந்திராவில் நவீனமயமாக்கப்பட்ட சூலூர்பேட்டை ரயில் நிலையத்தை பிரதமர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மெய்நிகர் முறையில் நவீனமயமாக்கப்பட்ட அம்ருத் பாரத் ரயில் நிலையங்களை திறந்து வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக, ஆந்திரப் பிரதேசத்தில் நவீனமயமாக்கப்பட்ட சூலூர்பேட்டை ரயில் நிலையத்தை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் மற்றும் எம்எல்ஏ நெலவாலா விஜய ஆகியோர் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

அப்போது அமைச்சர் பெம்மாசாணி சந்திரசேகர் பேசியதாவது: பிரிட்டிஷ் காலத்தில் ரயில் நிலையங்கள் வரைபடங்களில் மட்டுமே தெரியும். ஆனால் இன்றைய ரயில் நிலையங்கள் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கின்றன.

நான் குழந்தையாக இருந்தபோது, ​​ரயில்களிலும் பயணம் செய்தேன். அப்போது சரியான இருக்கை ஏற்பாடுகள் இல்லை. கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன. இந்த நிலையிலிருந்து இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் பேருந்து நிலையத்திற்குச் சென்றாலும் சரி, விமான நிலையத்திற்குச் சென்றாலும் சரி, மக்களும் பயணிகளும் ஒரு அற்புதமான அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி எடுத்த இந்த அம்ருத் பாரத் ரயில் நிலையத்தைத் தொடங்க வழிவகுத்தது.

பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, இந்தியாவிலும் வந்தே பாரத் ரயில்கள் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. இப்போது, ​​அம்ருத பாரத் நிலையத் திட்டத்தை முன்னெடுத்து 1300க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(நேற்று) திறந்து வைத்துள்ளார்.

அதன்படி, சூலூர்பேட்டை ரயில் நிலையம் ரூ.100 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தின் கட்டுமானம் உள்ளூர் மக்களின் உணர்வுகளை, செங்கலம்மா கோயிலின் கவுரவத்தை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

ரயில் நிலையங்களில் உள்ள பல ஒற்றை பாதை நிலையங்கள் இரட்டைப் பாதைகளாகவும், தேவைக்கேற்ப மூன்று பாதைகளாகவும் மேம்படுத்தப்படுகின்றன. கடந்த காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் நிதியைக் கொண்டு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டன.

ஆனால் இப்போது, ​​பல மாநிலங்களின் நிதி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கான முழு நிதிப் பொறுப்பையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.

மாநிலத்திற்கு 2025-26ம் ஆண்டு மத்திய அரசு ரூ.9 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ரயில்வே பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு ரயில்வே பட்ஜெட்டை 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க உள்ளது. பாஜகவுடன் இணைந்து, தொலைநோக்கு முடிவுகளை எடுத்து, ஆந்திரப் பிரதேசத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தைக் கொண்டுவர வழிவகுத்த முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு காரணமாகவே, ஆந்திரப் பிரதேசம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பட்ஜெட்டுகளைப் பெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் வெங்கடேஷ்வர், சென்னை கோட்ட ரயில்வே டி.ஆர்.எம். விஸ்வநாத், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயண ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி மாவட்டத் தலைவர் நரசிம்ம யாதவ், ஆர்.டி.ஓ. கிரண்மயி, ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post உள்ளூர் மக்களின் உணர்வுகளுடன் ரூ.100 கோடியில் நவீனமயமாக்கப்பட்ட சூலூர்பேட்டை ரயில் நிலையம் appeared first on Dinakaran.

Tags : Sulurpet railway station ,Minister ,Tirupati ,Andhra Pradesh ,Narendra Modi ,Amrut railway station ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை கேட்கும் பாஜக; எடப்பாடி அதிர்ச்சி!