×

வாரிசுகளால் தூக்கத்தை தொலைத்து துக்கத்தில் இருக்கும் மாஜி இலை கட்சி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சொத்து பிரிப்பதில் மண்டை காய்ந்து போய் உள்ள மாஜி இலை மந்திரியை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு புகழ் பெற்ற நகரின் இலைக்கட்சி மாஜி மந்திரிகளுள் ஒருவர் உள்ளார். ஞாபக மறதிக்கு சொந்தக்காரர் என்று இலை கட்சியினரே சொல்றாங்க. இப்போதுதான் டிவிட்ஸ்ட் ஆரம்பமாகி இருக்காம். மாஜி மந்திரியானவர் வயது மூப்பு காரணமாக, வாரிசுகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக சொத்துக்களை பிரித்து கொடுத்து விடலாம் என திட்டமிட்டாராம். இதற்காக வாரிசுகளை அழைத்து ஒரு ஓட்டலில் லஞ்ச் சாப்பிட்டு ரூமில் வைத்து குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம். இதில் நிலங்கள் பங்கீடு தொடர்பாக மகன்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாம். ஒரு மகன் ஒப்புக் கொண்டால், மற்றொரு மகன் ஏற்க மறுக்கிறாராம். இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த மூத்த மகன், தன் தந்தைக்கு சொந்தமாக சிறிய சிகர வனப்பகுதி அருகே தந்தை அமைச்சராக இருந்தபோது வாங்கிய 30 ஏக்கர் நிலத்தை அவசர அவசரமாக சுற்றுச்சுவர் எழுப்பி தனது ஆக்கிக் கொண்டாராம். மேலும், இந்த இடத்தின் பின்புறத்தில் உள்ள 60 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் கபளீகரம் செய்யவே இவ்வளவு அவசரம் என்ற தகவல் அவரது வட்டாரத்தில் இருந்து வெளியாகி இருக்கு. இந்த விஷயம் லீக் ஆகி, மற்ற மகன்கள் இதை தடுத்து வர்றாங்களாம். ஏற்கனவே, கட்சிப்பணிகளில் மந்தமாக செயல்படுவதாக, இவர் மீது சேலத்துக்காரர் கோபமாக உள்ளாராம். இந்த சூழலில் சொத்து பங்கீடு பிரச்னையால், மாஜி வனத்துறை மந்திரி மண்டை காய்ந்து வருகிறாராம்… செட்டில்மென்ட் ஆகும் வரை வாரிசுகள் நம்மை நிம்மதியாக இருக்க விட மாட்டாங்க போல…’’ என்று தன்னை சந்திக்க வரும் கட்சிக்காரர்களிடம் புலம்பி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ராஜ்பவனில் கோலோட்சி வரும் விவிஐபியின் பிடிவாதத்தால் ஒரு பல்கலைக்கழகமே தத்தளிக்கிறதாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பணிக்காலம் முடிந்து 6 மாசம் முடிஞ்சு போச்சு. இப்போ வரைக்கும் புதிதாக துணைவேந்தர் நியமனம் நடக்கவில்லையாம். துணைவேந்தர் பொறுப்புக்குழு ஒன்று மூலமாக பல்கலைக்கழக பணிகள் நடந்து வருதாம். இன்னும் துணைவேந்தர் தேடல் குழுவை முழுமையாக அமைக்காமல் காலதாமதம் ஏற்பட்டு இருப்பதால், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் பெறுவதற்கான அறிவிப்புகள்கூட வெளியிட முடியவில்லை. துணைவேந்தர் குழு மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மந்தமாக இருக்கிறதாம். கோப்புகளுக்கு கையெழுத்து வாங்குதல், துறை ரீதியான பணிகள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்காம். துணைவேந்தர் நியமனம் பணிகள் முடங்கி கிடப்பதற்கு முக்கிய காரணம், கிண்டியில் உள்ள விவிஐபியின் தலையீடு என்கிறார்கள். துணைவேந்தர் தேடல் குழுவுக்கு தமிழ்நாடு அரசின் பிரதிநிதியை நியமிக்கவில்லை எனவும் செய்தி வருகிறது. இதனால் மாணவர்கள் எதிர்காலம், அன்றாட பல்கலை நிகழ்வுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்காம்…’’ எனறார் விக்கியானந்தா.

‘‘ வாங்க.. வாங்க என்று கட்சிக்கு அழைத்து அல்வா கொடுக்கும் சேலம்காரர் பற்றிய ஒரே புலம்பல் சென்னை வரை கேட்கிறதாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் சேலத்துக்காரர் அணியில் டெக்ஸ்டைல்ஸ் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் விஜயமானவர் இரு ந்து வருகிறார். மாஜி அமைச்சரான கடைசி எழுத்தில் முடியக்கூடிய சாமி என்பவர் சமீபத்தில் சேலத்துக்காரரை நேரில் சந்தித்து அவரது அணியில் ஐக்கியமானார். ஆனால் சேலம்காரர் அவரை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் விஜயமானவரும் கூட கொஞ்சம் இடைவெளி விட்டே இருக்கார். தொண்டர்கள் கூட அவரை மதிப்பது கிடையாதாம். இதனால் மாஜி அமைச்சர் சாமி நொந்து போய் வீட்டிலேயே முடங்கினாராம். அந்த நேரம் பார்த்து மாஜி அமைச்சர் விஜயமானவர் வெளியூர் போய் இருந்தாராம். இதை பயன்படுத்தி மாஜி அமைச்சர் சாமி பத்திரிகையாளர்களை திடீரென சந்தித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம், சேலத்துக்காரர் அவரை கண்டுகொள்ளாமல் இருந்து வருவதால் அரசியல் ரீதியாக தன்னுடைய இருப்பை காட்டிக் கொள்ள பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினாராம். சேலத்துக்காரரும் கண்டு கொள்ளாததால் விரக்தியில் இருந்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பண்ணை குட்டை என்றாலே கிரிவலம் மாவட்டத்தில் ஒரே அலர்ஜியாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்த 30 நாட்களில் 1,221 பண்ணை குட்டை அமைத்து உலக சாதனை படைச்சாங்க. இதுக்காக கிரிவலம் கலெக்டரு, முதல்வர் கிட்ட பரிசும் வாங்கினாரு. இப்படி அரசு சார்புல பல்ேவறு வளர்ச்சி பணிகளை நடத்தி வர்றாங்க. அதேசமயம் இடைத்தரகர்கள் புகுந்து வசூல்வேட்டையும் நடத்தி வர்றாங்க. கிரிவலம் மாவட்டத்துல செ என்று தொடங்கி கம் என்று முடியுற வட்டம் இருக்குது. இந்த வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்கள்ல விவரம் அறியாத ஏழை விவசாயிகள் இருக்காங்க. இவங்க, திட்டங்கள் முழுசா தெரியாம இருக்குறாங்க. இதை பயன்படுத்திக்கிட்டு, பண்ணை குட்டை அமைக்க ஆணை வாங்கித்தர்றோம்னு இடை தரகர்கள், 10 கே வரைக்கும் வசூலிச்சிருக்குறது இப்ப, வெளிச்சத்துக்கு வந்திருக்குது. இடைத்தரகர் தங்களுக்கு ஹயர் ஆபிசர்ஸ்ஐ தெரியும்னு சொல்லி, வசூல் நடத்தியிருக்காங்க. இதுல வசூல் நடத்திய இடைத்தரகர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிலர் இறந்தும் போய்ட்டாங்களாம். பண்ணை குட்டை உள்ளிட்ட திட்டங்கள்ல பணத்தை கொடுத்தவங்க, யார் கிட்ட புகார்கொடுக்குறதுன்னு தெரியாம தவிச்சு வர்றாங்களாம். இடைத்தரகர்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குது…’’ என்றார் விக்கியானந்தா.

The post வாரிசுகளால் தூக்கத்தை தொலைத்து துக்கத்தில் இருக்கும் மாஜி இலை கட்சி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yananda ,Peter ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது