×

கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் நிறைவேற்றியது டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்ட மசோதா

டெல்லி: கடும் எதிர்ப்பை மீறி டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

9 நாட்களாக மக்களவை முடங்கிய நிலையில் டெல்லி அவசர சட்ட மசோதா தொடர்பாக இன்று விவாதம் தொடங்கியது. டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதாவை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளின் பதவிக்காலம், ஊதியம், இடமாற்றம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் விதிமுறைகளை உருவாக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை சொல்லும் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அம்மாநில முதலமைச்சர்களை சந்தித்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊழலை ஒழிக்கவே சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டதாக அமித்ஷா விளக்கமளித்துள்ளார். பாஜக ஆளாத மாநிலங்களை தொடர்ந்து பழிவாங்குவதாக இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா கடும் அமளிகளுக்கு இடையில் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாரதிய ராஷ்ட்டிரிய சமிதி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆம் ஆத்மி எம்பி சுசில்குமார் ரின்கு ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசியதால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஓம்.பிர்லா தெரிவித்தார். டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா நிறைவேறிய நிலையில் மக்களவை நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் நிறைவேற்றியது டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்ட மசோதா appeared first on Dinakaran.

Tags : Delhi Government ,Delhi ,IAS ,Dinakaran ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...