×
Saravana Stores

அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஆனதே தவிர தங்களுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமான அரசல்ல! மோடி அரசு நீடிக்காது, நிலைக்காது!: கி. வீரமணி தாக்கு

சென்னை: அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஆனதே தவிர தங்களுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமான அரசல்ல! மோடி அரசு நீடிக்காது, நிலைக்காது என திராவிட கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாட்டு அரசின் வரவு – செலவுத் திட்டமான ‘பட்ஜெட்‘ என்பது, வெறும் வரவு – செலவுத் திட்டம் என்பதைத் தாண்டி, அரசின் மூலாதாரத் திட்டம் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுத்தவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது!

* சொந்தக் காலில் நிற்க முடியாத மோடி அரசு

வெறும் சட்டம் – ஒழுங்கு பராமரிப்புதான் ஓர் அரசின் கடமை என்ற தொடக்க கால சிந்தனையைத் தாண்டி, மக்கள்நலம் பேணும் கடமையைச் செய்யும், அரசுகளுக்கு, குறிப்பாக ஜனநாயக முறை அரசுகளில் (Welfare State) நலத் திட்டங்கள்மூலம் செய்யும் மாறுதல் ஏற்பட்டது.அதன் பிறகு பட்ஜெட்மூலம் விலைவாசியைக் கட்டுப்படுத்துதல், பண வீக்கத்தைத் தடுத்தல், வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் வரி விதிப்புகளை உருவாக்குதல், வேலை கிட்டாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குதல் போன்ற அரசின் கொள்கை அமலாக்கக் கருவியாக மாறியது!ஆனால், பிரதமர் தலைமையில் தற்போது நடைபெறும் – சொந்தக்காலில் நிற்காமல், மைனாரிட்டி அரசுதான்! பி.ஜே.பி. – மற்ற இரண்டு கட்சிகள் தெலுங்குதேசம், பீகாரின் அய்க்கிய ஜனதா தளம் மற்றும் சில உதிரி கட்சிகளின்மூலம் கூட்டணி அரசு அமைத்து, பிரதமர் நாற்காலி சாய்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இந்த முட்டுகளைச் சரியாகப் பார்த்து வரும் கவலை முதல் கவலையாகவே பிரதமர் மோடிக்கு ஏற்றப்பட்டு – அவ்வரசு, ‘நித்திய கண்டம் பூரண ஆயுசு‘ என்ற சொலவடைக்கொப்ப நடந்து வருகிறது! மாநில அந்தஸ்து சில மாநிலங்களுக்கு அளிப்போம் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அறிவிக்கவில்லையா? பிரதமர் மோடியே முன்பு பல மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றபோது, தனி அந்தஸ்து அந்தந்த மாநிலங்களுக்கு அளிப்போம் என்று கூறி, ஓட்டு வேட்டையாடினார்! இப்போது அதை நினைவூட்டிக் கேட்கத் தொடங்கிய நிலையில், 2024–2025 ஆம் நிதியாண்டின் பட்ஜெட்டை, தனது நாற்காலியை ஆடாது நிலைக்க வைக்கும் நோக்கத்தில் கணிசமான நிதியை இரண்டு மாநிலங்களுக்கே (ஆந்திரா, பீகாருக்கு) மட்டும் ஒதுக்கி, ஏற்கெனவே வாக்களித்த மற்ற மாநிலங்களுக்கோ பட்டை நாமம் போட்டுவிட்டார்! தெலங்கானா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபொழுது பல சந்தர்ப்பங்களில் கூறியது என்ன? ஒடிசா மாநிலத்தில் பிஜு பட்நாயக் ஆட்சியைத் தோற்கடிக்க அதற்குத் தனி அந்தஸ்து தருவதாக நாக்கில் தேன் தடவியது வசதியாக மறந்துவிட்டதா என்ற கேள்விகள் கிளம்பியுள்ளன!

* வஞ்சிக்கப்பட்ட மாநிலங்கள்!

தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கருநாடகா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில், அவை முழுமையாக வஞ்சிக்கப்பட்ட நிலை அப்பட்டமாகத் தெரிகிறது! மாநிலங்கள் இணைந்ததால்தான் ஒன்றிய அரசு இந்திய அரசு என்ற அரசமைப்புச் சட்டத்தின் முதல் கூறு (First Aritlce) என்பதைக்கூட மறந்து, தங்களுக்கு முட்டுக்கொடுக்கும் அரசுகளுக்கு அள்ளி அள்ளித் தருதல், எதிர்க்கட்சிகளை வெற்றி பெற வைத்த மாநிலங்களுக்குக் கிள்ளியும்கூடத் தராமல், ஏதோ பழைய சக்ரவர்த்தி ராஜா ஆட்சியில், சிற்றரசர்களைக் கப்பம் கட்ட வற்புறுத்துவதுபோல், ஒருதலைபட்சமாக ஓரவஞ்சனையுடன் நடந்துகொள்வது நியாயமா? ஒன்றிய அரசிற்குரிய வரவு என்பது மாநில அரசுகள் வசூலித்துத் தரும் பங்களிப்பு காரணமாகவே தானே சேர்ந்த நிதி! ஜி.எஸ்.டி. ஒன்று போதாதா? நேர்முக வரி, மறைமுக வரி என்ற வகையிலும் ஒன்றிய அரசு வாங்கி, வட்டி கட்டி, கடனைத் திருப்பித் தருவது மாநில மக்களிடமிருந்தும், மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களிலிருந்தும்தானே! அப்படி இருக்க மைனாரிட்டி ஆக்கப்பட்டு மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு கட்சியின் அரசு இப்படிப்பட்ட வித்தைகளாலும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள், தங்கள் கட்சிக்கு வாக்களிக்காத மாநில மக்களைப் பழி தீர்க்க, நிதி ஒதுக்கீடு செய்யாமல், பட்ஜெட்டை ஓரவஞ்சனையில் ஓவியமாக்கிட்டு, ஒய்யாரப் பேச்சுப் பேசுவது அரசியல் அடாவடித்தனம் அல்லாமல், வேறு என்ன?

* ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டும்தான் ஆட்சியா?

தமிழ்நாட்டில், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து மூக்கறுபட்டு மூலையில் தள்ளப்பட்ட சில கட்சிகளும், அதன் அரைவேக்காட்டுத் தலைவர்களும் எங்களுக்கு 25 இடங்களில் வெற்றி பெற வைத்திருந்தால், நிதி கொட்டியிருக்கும் என்று பேசுவது அரசியல் அறியாமை மட்டுமல்ல; அரசமைப்புச் சட்டத்தின் புரியாமையும்கூட! ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டும்தான் ஓர் அரசு, தேர்தலுக்குப் பின்னர், அதற்காகவே நாங்கள் மக்கள் தரும் வரிப் பணத்தை தன்னிச்சையாக, நாங்கள் வழங்குவதில் இன்னார் – இனியார் என்ற பாகுபாடு காட்டுவோம் என்பதை வெளிப்படையாகவே சொல்வது – கீழிறிக்க அரசியலாக மலிவான பேரக்களமாக ஆக்கிவிட்டது மகாமகா வெட்கக்கேடு அல்லவா?

* குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பிக்க விபீடணர்களாகி விட்டனர்!

மக்கள் வரிப் பண விநியோகம் ஆளும் கட்சி தரும் பணமோ, நிதியோ அல்ல! மக்கள் பணம்! ஜனநாயகத்தில் ஆட்சி செலுத்துவோர் தனிக்காட்டு ராஜாவாக ஆள முடியாது! சில குற்ற வழக்குகளில் சிக்கி தங்களை விடுவித்துக்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணியினர் என்ற பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி அரசில் நீடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதால், இவர்கள் தமிழ்நாட்டு நலனைக் காட்டிக் கொடுக்கும் விபீடண, சுக்கிரீவன் அடையாளங்களாகி வலம் வருகின்றனர்! மக்கள் தரும் தோல்விபற்றிக்கூட கவலைப்படாமல், இப்படி அரசியல் உளறல் ஊற்றுக்களாகி, தங்களது ஆணவ அறியாமைக்கு வெளிச்சம் போட்டுள்ளனர்.மக்கள் விரோதிகள் நாங்கள் என்று பகிரங்கப்படுத்துகிறார்கள் – பரிதாபத்திற்குரிய இவர்கள்!

* தன்னை விற்றுக்கொள்பவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்!

தமிழ்நாடு என்று முன்பு மூச்சுக்கு முந்நூறு முறை கூறியவர், தமிழ்நாட்டு வெள்ள நிவாரணத்திற்கு கிள்ளிக்கூடத் தராது, வட மாநிலங்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் கொடுப்பது நியாயமா? என்று கேட்கத் துணிவில்லாத துன்மார்க்க அரசியல் வியாதிகளை தேர்தலின்போது, மக்கள் அறவே துடைத்தெறிந்து விரட்டுவார்கள் என்பது உறுதி!‘உன்னை விற்காதே‘ என்றார் புரட்சிக்கவிஞர்! தன்னைத் தேர்தலுக்கு விற்றுக் கொள்ளும் இவர்கள், இப்படி நடப்பதை தமிழ் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்! நாளும் தேய்ந்து வந்த பிறகும், தெளிவு பிறக்கவில்லையே! காரணம், ‘மடியில் கனம், வழியில் பயம்‘ – பல சிக்கல்களிலிருந்து மீள இப்படி ஒத்து ஊத வேண்டுமா?

* நிட்டி ஆயோக்கை முதலமைச்சர் புறக்கணிக்கும் காரணம்!

பட்ஜெட்டில், தமிழ்நாடு – பெயர் வரவில்லை என்று எந்தப் பொருளில், எதற்காகக் கேட்கிறார்கள் என்பதுகூட புரியாமல், தங்களை மேதைகள்போல எண்ணும் அரசியல் சூன்யங்களுக்கு மக்கள் பல முறை பாடம் கற்பித்தும், புத்திக் கொள்முதல் செய்துகொள்ளாமல் உலா வருவது அவலமல்லவா!நமது முதலமைச்சர் தமிழ்நாட்டின் எதிர்ப்பினை வெளிப்படுத்த ‘நிட்டி ஆயோக்‘ கூட்டத்தினைப் புறக்கணித்துப் பதிவு செய்துள்ளார்!

* மோடி ஆட்சி நீடிக்குமா – நிலைக்குமா? என்பது முக்கிய கேள்வி!

தமிழ்நாடு மட்டுமல்ல, மற்ற பல மாநிலங்களின் (தெலங்கானா, கருநாடகா, கேரளா, பஞ்சாப், மேற்குவங்கம்) முதலமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர். இங்கு எப்படிப்பட்ட பழிவாங்கும் ஓரவஞ்சனை அரசு – மக்கள் விரோத அரசாக நடக்கிறது என்பதை உலகிற்கு அறவழியில் பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். எனவே, இந்த நிதிநிலை அறிக்கை மக்களைக் காப்பாற்ற வெளியிடப்பட்ட நியாயமான பட்ஜெட் அல்ல!மாறாக, தங்களை, தங்கள் நாற்காலிகளைக் காப்பாற்றிட போடப்பட்ட ஒரு ‘பெஃவிகால் ஒட்டுக்கான பட்ஜெட்‘டே தவிர, வேறில்லை. இப்படியே நடவடிக்கைகளை மோடி அரசு தொடர்ந்தால், அதன் ஆட்சி தொடர்வது நீடிக்குமா? நிலைக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் ஆனதே தவிர தங்களுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமான அரசல்ல! மோடி அரசு நீடிக்காது, நிலைக்காது!: கி. வீரமணி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi government ,Ki ,Veeramani ,CHENNAI ,Dravida Kazhagam ,President ,K. ,Veeramani Thakku ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:...