×

விளையாட்டு வீரர்களுக்கு 4 மாவட்டங்களில் ரூ.44.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம், இணையதள சேவை: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

சென்னை: விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ரூ.44 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களையும், பல்வேறு இணையதள சேவைகளையும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை நேரு விளையாட்டரங்க வளாகத்தில் ரூ.17 கோடியே 47 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு கட்டிடத்தில் சென்னை ஒலிம்பிக் அகடமி கட்டிடம், தரைத்தளத்தில் பன்நோக்கு விளையாட்டுத் தளம், முதல் தளத்தில் டேக்வாண்டோ மற்றும் ஜுடோ விளையாட்டுத் தளம், 2வது தளத்தில் வாள்வீச்சு தளம் மற்றும் 3வது தளத்தில் விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.5.33 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், மேலும் ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையம் அமைக்கப்பட்ட கட்டிடம், ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் கெனோயிங் மற்றும் கயாக்கிங்கிற்கான முதன்மை நிலை பயிற்சி மையக் கட்டிடம் அமையப் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட விளையாட்டரங்கம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் மற்றும் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தையும், இணையதள சேவைகளான விளையாட்டரங்க உறுப்பினர் பதிவு, உரிமம் பெற்ற வளாக நிர்வாக அமைப்பு உயரிய ஊக்கத்தொகை இணையவழி விண்ணப்பம் மற்றும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்களை டிஜிலாக்கர் (Digilocker) இணையதளம் வாயிலாக பெறுதல் ஆகிய சேவைகளை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post விளையாட்டு வீரர்களுக்கு 4 மாவட்டங்களில் ரூ.44.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடம், இணையதள சேவை: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,CHENNAI ,Sports Minister ,Udhayanidhi Stalin ,Chengalpattu ,Nilgiris ,Tirupur ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED தனித்திறமைகளிலும் மாணவர்கள்...