×

சிறப்பு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுக்கோட்டையில் செயல்படும் காதுகேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 48 காதுகேளாத மாற்றுத் திறனாளி, 35 பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்களும் படித்து வருகின்றனர். பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்களை கவனித்து வந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த மாணவர்களையும் சேர்த்து கவனிக்குமாறு காதுகேளாத மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்த ஆசிரியர் காயத்ரிக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் 365 நாட்களும் விடுமுறை இல்லாமல் பணியாற்றி வரும் தனக்கு ஞாயிற்று கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரியும் ஆசிரியர் காயத்ரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்களை கவனிக்க சிவகங்கையில் இருந்து ஆனந்தன் என்ற ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி, கடந்த 2016ம் ஆண்டு முதல் 365 நாட்களும் விடுமுறையில்லாமல் மனுதாரர் பணியாற்றியுள்ளார். 365 நாட்களும் விடுமுறை இல்லாமல் யாரும் பணியாற்ற முடியாது என்பதால், அரசு விடுமுறை நாட்களிலாவது மனுதாரருக்கு விடுப்பு வழங்குவதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயிக்கப்படுவதைப் போல இதுபோன்ற சிறப்பு பள்ளிகளிலும் மாணவர்-ஆசிரியர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க கொள்கை முடிவெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறி அக்டோபர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post சிறப்பு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Pudukottai government ,Dinakaran ,
× RELATED அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு...