×

நமஸ்கார் From Space!.. விண்வெளியில் மிதப்பது அற்புதமாக உள்ளது: விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சி..!!

வாஷிங்டன்: விண்வெளியில் மிதப்பது அற்புதமாக உள்ளது என்று சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் கடந்த 11ம் தேதி செயல்படுத்தப்பட இருந்தது. இந்த விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்கா, ஹங்கேரி, போலந்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஏவப்படவிருந்த இந்த பயணம், மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு உள்ளிட்ட பல்வேறு கோளாறு காரணமாக அடுத்தடுத்து 6 முறை ராக்கெட் ஏவுதல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் திட்டமிட்டபடி, நேற்று பிற்பகல் 12.01 மணிக்கு புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸின் பால்கன் 9 ராக்கெட் மூலமாக டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பால்கன் 9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த முதல்கட்ட எஞ்சின், பூமிக்கே திரும்பியது. புவிவட்டப்பாதைக்குள் நுழைந்த பால்கன் ராக்கெட், புறப்பட்ட 8 நிமிடங்களில் முதல் கட்டத்தை கடந்தது. இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை விண்கலம் சென்றடையும். இந்த விண்வெளி பயணம் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார்.

இந்நிலையில், விண்கலத்தில் இருந்தபடி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, தனது விண்வெளி பயணம் குறித்த விவரங்களைத் தருகிறார். நமஸ்கார் From Space!. என் சக விண்வெளி வீரர்களுடன் இங்கு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விண்வெளியில் மிதப்பது அற்புதமாக உள்ளது. எந்தவித சப்தமும் இல்லாமல் விண்வெளியில் மிதப்பது வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அது என்ன ஒரு சவால். ஒரு குழந்தையைப் போல விண்வெளியில் எப்படி நடப்பது, சாப்பிடுவது என கற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் ஒவ்வொரு தருணத்தையும் மிகவும் ரசிக்கிறேன் என்று அவர் கூறினார். பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் அனுபவம் “மிகவும் யதார்த்தமானது” மற்றும் “வேடிக்கையானது” என்று சுக்லா விவரித்தார். மென்மையான பொம்மை ஸ்வான் ஒன்றை எடுத்துச் செல்லும் அவர், இந்திய கலாச்சாரத்தில், ஸ்வான் ஞானத்தின் சின்னம் என்று சுபான்ஷு கூறுகிறார்.

The post நமஸ்கார் From Space!.. விண்வெளியில் மிதப்பது அற்புதமாக உள்ளது: விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Washington ,Subanshu Shukla ,ISRO ,NASA ,Axium Space ,International Space Station ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்கு...