×

தென் மாவட்டங்களில் கனமழை – தேவையான அடிப்படை வசதிகளை கொடுப்பதை உறுதி செய்க : டிடிவி தினகரன்

சென்னை : தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் இடைவிடாமல் கனமழை பெய்துவருகிறது.

அம்மாவட்டங்களில் குடியிருப்புகளில் புகுந்திருக்கும் மழைநீர் மற்றும் சாலைகளில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் இல்லங்களை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு ஏராளமான மக்கள் முடங்கியுள்ளனர்.

தென்மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பெய்துவரும் கனமழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தென் மாவட்டங்களில் கனமழை – தேவையான அடிப்படை வசதிகளை கொடுப்பதை உறுதி செய்க : டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : southern ,TTV Dhinakaran ,Chennai ,Dinakaran ,
× RELATED தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் பயணம்...