×

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

* ஆக.2ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் வாகனங்களுக்கு அனுமதி

* ஆக.2 மாலை முதல் ஆக.5ம் தேதி வரை அரசு பேருந்தில் செல்லலாம்

* போதைப் பொருட்களை கொண்டு சென்றால் வழக்கு பதிவு, வாகனம் பறிமுதல்

விகேபுரம் : காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் வரும் 4ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சப்.கலெக்டர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்ந விழாவையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சப்- கலெக்டர் அர்பித் ஜெயின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்களின் நலன் கருதி பல்வேறு முன்னேற்பாடுகள் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகளால் செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழாவிற்கு பொதுமக்கள் ஆக.2ம் தேதி காலை 6 மணியிலிருந்து நான்கு மணி வரை காரையாறு கோயிலுக்கு செல்ல தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆக.2ம் தேதி மாலை 4 மணியில் இருந்து ஆக.5ம் தேதி வரை தனியார் வாகனங்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

ஆக.2ம் தேதி மாலை 4 மணியில் இருந்து ஆக.5ம் தேதி வரை தனியார் வாகனங்கள் அனைத்தும் அகஸ்தியர்பட்டியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்த வேண்டும். அவர்கள் அனைவரும் அரசு பேருந்தில் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து ஆக.6ம் தேதி காலை 6 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தனியார் வாகனங்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி ஆகிய நாட்கள் முழுவதும் கோயில் திருவிழா முன்னேற்பாடுகள் மற்றும் தூய்மை பணி நடைபெறுவதால் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அதேபோன்று ஆக.7 மற்றும் ஆக.8ம் தேதியில் தூய்மை பணி மற்றும் கோயிலில் உழவாரப்பணி நடைபெறுவதால் அன்றும் அரசு, தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

ஆக.9ம் தேதி முதல் வழக்கம்போல் கோயிலுக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஜூலை 31ம் தேதியிலிருந்து ஆக.8ம் தேதி வரை மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி மற்றும் மாஞ்சோலைக்குச் செல்ல அனுமதி இல்லை. டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர்கள் எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை.

கோவில் நிர்வாகம் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும் குடில்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட இடத்தில் குடில் அமைக்க அனுமதி இல்லை. கடந்த ஆண்டு ஒரு சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து குடில்கள் அமைத்து பக்தர்களிடம் அடாவடி செய்து பணம் பறித்து உள்ளார்கள். இந்த ஆண்டு இதே போல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, ஷாம்பு, மண்ணெண்ணெய் மற்றும் மாசு ஏற்படும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களை கொண்டு சென்றால் அவர்கள் மீது வழக்கு தொடர்வதோடு வாகனமும் பறிமுதல் செய்யப்படும். கோயில் வனப்பகுதியை விடுத்து பிற பகுதிகளுக்குள் செல்லக் கூடாது. ஆற்றில் ஆழமான பகுதிகளுக்கும் செல்லக்கூடாது. இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசு துறைகளில் சார்ந்த அதிகாரிகளின் அறிவுரையை பின்பற்றி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி அமாவாசை திருவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Karaiyar Sorimuthu Ayyanar Temple ,Aadi Amavasai festival ,Karaiyar Sorimuthu Aiyanar Koil ,Adi Amavasi festival ,
× RELATED காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில்...