×

சமூக ஊடகங்களில் திராவிடத்துக்கு எதிரான கருத்துகளை பரப்புகிறார்கள் பதிலடி கொடுக்கும் கடமை திமுக அயலக அணிக்கு உள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: சமூக ஊடகங்களில் திராவிடத்துக்கு எதிரான கருத்துகளை சங்கிகள் தொடர்ந்து பரப்புகிறார்கள் என்றும், அவர்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் கடமை திமுக அயலக அணிக்கு உள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். திமுக அயலக அணியின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் நேற்று நடந்தது.

விழாவில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
சமூக ஊடகங்களில் திராவிடத்துக்கு எதிரான கருத்துகளை சங்கிகள் தொடர்ந்து பரப்புகிறார்கள். அவர்கள் எத்தனை முகமூடிகள் வேண்டுமானாலும் போட்டுக் கொண்டு வரட்டும். அதையெல்லாம் முறியடிக்க நமக்கு முகமூடிகள் தேவையில்லை. தந்தை பெரியாரின் முகம் போதும், அண்ணாவின் எழுத்துகள் போதும், கலைஞரின் பேச்சுகள் போதும்.

முன்பெல்லாம், வெளிநாட்டில் பணிக்கு போய், அங்கு எதிர்பாராதவிதமாக ஒருவர் இறந்தால் அவரின் உடலை கொண்டு வர 6 மாதம் முதல் ஓராண்டு வரை ஆகிவிடும். ஆனால் திமுக அயலக அணி உருவாக்கப்பட்ட பிறகு, ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் இறந்தவர்களின் உடல் 10 நாட்களில் உறவினர்களிடம் கொண்டு வந்து சேர்க்கிற அணியாக அயலக அணி திகழ்கிறது.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை வரப்போகிறது என்று சொல்கிறார்கள். பேச்சுவார்த்தையில் இருப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால், அது திமுகவுக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய பலமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்துக்கு, திமுக அயலக அணிச் செயலாளர் அப்துல்லா எம்பி வரவேற்றார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் புகழ்காந்தி, மனுராஜ் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

The post சமூக ஊடகங்களில் திராவிடத்துக்கு எதிரான கருத்துகளை பரப்புகிறார்கள் பதிலடி கொடுக்கும் கடமை திமுக அயலக அணிக்கு உள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK district ,Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Udhayanidhi Stalin ,Sanghis ,DMK ,Dinakaran ,
× RELATED திராவிட மாடலின் அடித்தளமாக திகழும்...