×

கடத்தல் குருவிகளாக செயல்படும் விமான நிலைய ஊழியர்கள் சென்னை விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

தாம்பரம்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்புடைய 2 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்து 3 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில், நேற்று முன்தினம் இரவு மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமான நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் வெங்கடேஸ்வரன் (30), மதிநுல்லா (28) ஆகிய இருவரும் விமான நிலையத்தின் வெளிப்புறப்பாடு பகுதியில் குடியுரிமை பகுதி அருகே உள்ள கழிவறைக்கு சென்றவர்கள், நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தனர்.

இதனால், சந்தேகமடைந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள், அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால், இரண்டு பேரையும், மத்திய தொழிற் பாதுகாப்படை அலுவலகத்துக்கு அழைத்து சென்று முழுமையாக சோதனை நடத்தினர். அதில் அவர்கள் அணிந்திருந்த ஷூ காலுறைக்குள் சிறுசிறு பார்சல்கள் மறைத்து வைத்திருந்தனர். அதை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் தங்கப் பசைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 8 பாக்கெட்களிலும், 1 கிலோ 902 கிராம் தங்க பசைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.25 கோடி ஆகும்.

தொடர்ந்து இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் துபாயில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த முகமது குதாஸ் (36) என்ற பயணி, விமானத்தில் கடத்தி வந்த இந்த தங்கப் பசை அடங்கிய பார்சலை, விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் இருவரும் பெற்று, விமான நிலைய கழிவறைக்குள் சென்று தங்களுடைய ஷூ காலுறைக்குள் மறைத்து வைத்து சுங்கச் சோதனை இல்லாமல் தங்கப் பசையை வெளியில் எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, மற்றொரு விமானத்தில் இலங்கைக்கு தப்பி செல்ல இருந்த இலங்கை கடத்தல் பயணி முகமது குதாஸையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்தனர். அதன்பின்பு 3 பேரையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க பசையையும், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடத்தல் குருவிகளாக செயல்படும் விமான நிலைய ஊழியர்கள் சென்னை விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Tambaram ,
× RELATED சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆதி என்ற ரவுடி வெட்டிக்கொலை