×

சவால் எழுப்பும் சின்னர், அல்காரஸ் 25வது கிராண்ட் ஸ்லாம் வெல்வாரா ஜோகோவிச்?

லண்டன்: டென்னிஸ் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரும் 30ம் தேதி லண்டனில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் செர்பியா ஜாம்பவான் வீரர் நோவக் ஜோகோவிச், 25வது கிராண்ட் ஸ்லாம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க முன்னணி நட்சத்திரங்கள் லண்டனில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர், முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (38 வயது, 6வது ரேங்க்). இதுவரை 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அவற்றில் 7 பட்டங்கள் விம்பிள்டனில் வசப்படுத்தியவை.இதுவரை 19 ஆண்டுகளாக இடைவெளி இல்லாமல் தொடர்ந்து விம்பிள்டனில் விளையாடி வரும் ஜோகோவிச், 2011, 2014, 2015, 2018, 2019, 2021, 2022 என 7 ஆண்டுகள் சாம்பியன் பட்டம் வென்றார். தவிர, 6 ஆண்டுகளாக தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் களம் கண்டுள்ளார் ஜோகோவிச். அவற்றில் 2023, 2024ம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் தொடர்ந்து ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதனால் 8வது முறையாக விம்பிள்டன் பட்டம் வெல்லும் வாய்ப்பு கை நழுவி போனது.

இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றால் 8 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் பெடரரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்ய முடியும். மேலும், 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற புதிய சாதனையையும் ஜோகோவிச் படைப்பார். இப்போது தலா 24 பட்டங்களுடன் வீரர்களில், ஜோகோவிச்சும், வீராங்கனைகளில் மார்கரெட் கோர்ட்டும் (ஆஸ்திரேலியா) முதல் இடத்தில் இருக்கின்றனர். ஜோகோவிச் பெரிய இலக்குடன் களமிறங்கினாலும், ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்பில் இருக்கும் அல்காரஸ், நம்பர் ஒன் வீரர் ஜானிக் சின்னர், நீண்ட நாட்களாக விம்பிள்டன் கனவில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரவ், டானில் மெத்வதேவ், ஸ்டெபனோ சிட்சிபாஸ் என பலர் ஜோகோவிச்சுக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.

The post சவால் எழுப்பும் சின்னர், அல்காரஸ் 25வது கிராண்ட் ஸ்லாம் வெல்வாரா ஜோகோவிச்? appeared first on Dinakaran.

Tags : Sinner ,Alcarus ,Grand Slam ,Velvara Djokovic ,London ,Wimbledon Grand Slam ,Serbia ,Novak Djokovic ,25th ,Welvara Djokovic ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!