×
Saravana Stores

எளிய மக்களின் வழிபாட்டு உரிமைக்கு வாசல் திறந்துவைத்த வல்லமை நிறைந்தவர்: பங்காரு அடிகளார் மறைவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரங்கல்

சென்னை: பங்காரு அடிகளார் மறைவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைத்துவந்தனர். அவரது மரண செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிந்து வருகிறார்கள். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மட்டுமின்றி ஆன்மீகவாதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பங்காரு அடிகளார் மறைவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2021 டிசம்பர் 12 அன்று தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களால், மேல்மருவத்தூரில் “இன்னுயிர்க் காப்போம்-நம்மைக்காக்கும் 48” எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களை, எதிர்காலத்தில் காக்கமுடியும் எனும் அரசின் தொலைநோக்குச் சிந்தனையைப் பாராட்டி, தன் மருத்துவக் கவ்வி நிறுவனத்திலேயே இத்திட்டத்தைத் தொடங்கிவைக்க அடிகளார் இசைவு தெரிவித்தார்.

மானுடத்தின் மீது அடிகளார் கொண்ட கருணையும், பற்றையும் கண்டுணர்ந்து வியந்து நின்றோம். எல்லா உயிர்களிடத்தும் அவர் தாய்மையின் அன்பை வழங்கினார், சமத்துவத்தில், பெண்களின் சரிநிகரில் உறுதியை நிலைநாட்டினார். எளிய மக்களின் வழிபாட்டு உரிமைக்கு வாசல் திறந்துவைத்த வல்லமை நிறைந்தவர் அவர். இன்றந்த “ஆன்மீகச் சிற்பி ” நம்மிடையே இல்லை. ஆனாலும் அவர் பதித்து சென்ற ஆன்மீகம் மற்றும் கல்விச் சுவடுகள் கால காலத்திற்கும் அழியாது நிலைத்திருக்கும். ஓங்குக அடிகளார் புகழ்! அவரது குடும்பத்தாருக்கும்-உறவுகளுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post எளிய மக்களின் வழிபாட்டு உரிமைக்கு வாசல் திறந்துவைத்த வல்லமை நிறைந்தவர்: பங்காரு அடிகளார் மறைவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Bangaru Adikalar ,Chennai ,Bangaru ,Melmaruvathur Adiparashakti Siddhar Peedam ,M.Subramanian ,Adikalar ,
× RELATED குழந்தையின் தொப்புள் கொடி அறுப்பு...