×

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு!!

டெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை குறிப்பாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்ப்பது பற்றி கூட்டறிக்கையில் கூறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்நாத் சிங் கையெழுத்திடவில்லை. சீனாவின் கிங்டாவோ நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

இந்த மாநாட்டில், சீனா, பாகிஸ்தான், ரஷியா, ஈரான் உள்பட 10 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்று உரையாற்றினர். இந்த மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து குறிப்பிடாததாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை அறிக்கை பிரதிபலிக்கவில்லை எனக் கூறியும் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அறிக்கையில், பலுசிஸ்தான் பிரச்னையைக் குறிப்பிட்டு, அப்பகுதியில் இந்தியா அமைதியின்மையை உருவாக்குவதாக மறைமுகமாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் எதிர்ப்பு தெரிவித்தார். பாக். ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை கண்டிக்க வேண்டும் என்றும் பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலை தவறு என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஒத்த கருத்து ஏற்படாததால் கூட்டறிக்கை இன்றி ஷாங்காய் ஒத்துழைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு முடிந்தது.

The post ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுப்பு!! appeared first on Dinakaran.

Tags : Indian ,Defence Minister ,Rajnath Singh ,Shanghai Cooperation Organization ,Delhi ,Indian Defence ,Minister ,Shanghai Cooperation Organisation ,China ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்கு...