×

வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்திலா அறுவை சிகிச்சை செய்ய முடியும்? எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றால் நேரு விளையாட்டு மைதானத்தில் வைத்தா ஆபரேஷன் செய்ய முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எதிர்க்கட்சியினருக்கு கேள்வி எழுப்பி உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நேற்று 100 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 10 இடங்களில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றன. சென்னை கோடம்பாக்கம் புலியூர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் 103 இடங்களில் நடைபெற்றது. 2000க்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு முகாமின் மூலம் பயன்பெறுவர். தமிழகத்தில் முதல் முறையாக இந்த துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கண்ணொளி முகாம்கள் என்கின்ற வகையில் தமிழ்நாட்டில் 100 இடங்களில் விரைவில் நடத்தப்படவிருக்கிறது.கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் 1.67 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டுள்னர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார். சிறைத்துறை காவலர்கள் அனுமதியுடன் அவர்களின் குடும்பத்தினர் பேசி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை விமர்சிக்கும் எதிர்கட்சியினர், அவர்களுக்கு அந்த இதய அறுவை சிகிச்சை செய்தால் தான் அதன் தீவிரம் தெரியக்கூடும். வெளிப்படைத்தன்மையுடன் இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனில் நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையிலா அறுவை சிகிச்சை செய்ய முடியும்? என தெரிவித்தார்.

The post வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்திலா அறுவை சிகிச்சை செய்ய முடியும்? எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Nehru Stadium ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Subramanian ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை வழக்கில் இருந்து...