×

தஞ்சை ஆசிரியை கொலை வழக்கில் பரபரப்பு தகவல்; காதலிக்காக ரூ.1 லட்சம் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூரிலிருந்து வந்தேன்: திருமணத்துக்கு மறுத்ததால் கொன்றேன்; வாலிபர் வாக்குமூலம்

தஞ்சாவூர்: தஞ்சை ஆசிரியை கொலை வழக்கில் கைதான வாலிபர், காதலிக்காக சிங்கப்பூரில் ரூ.1 லட்சம் வேலையை உதறிவிட்டு வந்தேன், திருமணத்துக்கு மறுத்ததால் கொன்றேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்திருந்த ஆசிரியை ரமணி நேற்றுமுன்தினம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த சின்னமனை கிராமத்தை சேர்ந்த மதன்குமாரை (28) சேதுபாவாசத்திரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மதன்குமார் அளித்த பகீர் வாக்குமூலம்: சிறுவயதிலிருந்தே நானும் ரமணியும் பேசி பழகி வந்தோம். நான் சிங்கப்பூரில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வந்தேன். ரமணியை திருமணம் செய்து வாழலாம் என நினைத்து அந்த ேவலையை விட்டுவிட்டு சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்து மீன்பிடிக்கும் வேலை செய்தேன். மற்ற நேரத்தில் எலக்ட்ரீசியன்களுக்கு உதவி செய்யும் வேலைகளும் செய்தேன். 28 வயதாகிவிட்டதால் எனக்கு வீட்டில் பெண் பார்த்தனர். அப்போது ஆசிரியை ரமணி வீட்டில் சென்று பெண் கேட்கும்படி கூறினேன். அவர்களும் சென்று கேட்டனர். அவர்கள் சரியான பதில் கூறவில்லை. இருப்பினும் நான் தொடர்ந்து ரமணியிடம் பேசி நமது திருமணத்திற்கு உனது பெற்றோரை சம்மதிக்க சொல் என்று கூறினேன்.

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு எனது ஜாதகத்தை ரமணியின் வீட்டில் வாங்கி சென்றனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்றால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்காது, இனி பெண் கேட்டு வர வேண்டாம் வேறு இடத்தில் ரமணியை திருமணம் செய்து கொடுப்போம் என்று கூறிவிட்டனர். இதையடுத்து ரமணியின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட தொடங்கியது. அவர் என்னுடன் பேசுவதை தவிர்த்தார். இதனால் ஒவ்வொரு நாளும் வலியால் துடித்தேன். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் புரிந்து கொள்ளவில்லை. இதனால் ரமணியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன். கடைசியாக நேரில் சென்று பேசிப் பார்க்கலாம் என நினைத்து பள்ளிக்குச் சென்றேன். அங்கு ஆசிரியர்களின் அறையில் இருந்த ரமணியிடம் ‘‘நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது’’ என்று கூறினேன். ஆனால், ரமணி உன்னை திருமணம் செய்ய முடியாது, நீ இங்கிருந்து போய் விடு என்று விரட்டினார். எவ்வளவோ போராடியும் திருமணத்துக்கு மறுத்ததால் கத்தியை எடுத்து கழுத்தில் குத்தி கொலை செய்தேன். பின்னர் அதை நினைத்து வருத்தப்பட்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

The post தஞ்சை ஆசிரியை கொலை வழக்கில் பரபரப்பு தகவல்; காதலிக்காக ரூ.1 லட்சம் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூரிலிருந்து வந்தேன்: திருமணத்துக்கு மறுத்ததால் கொன்றேன்; வாலிபர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Singapore ,Thanjavur ,Pattukottai ,Mallipatnam Government High School ,
× RELATED தஞ்சை அருகே மது விற்றவர் கைது