×

உரிய ஆவணமின்றி தடைசெய்யப்பட்ட அரசு புறம்போக்கு இடங்களில் கட்டிய வீடுகளுக்கு வழங்கிய மீட்டர்கள் பறிமுதல்: மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை

செங்கல்பட்டு: உரிய ஆவணமின்றி தடைசெய்யப்பட்ட, அரசு புறம்போக்கு இடங்களில் வீடுகளுக்கு வழங்கிய மின் மீட்டர்களை மின் வாரிய அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டன. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், திருமழிசை ஆகிய மின் கோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து தொழிற்சாலை, விவசாயம், வர்த்தக நிறுவனங்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அலுவலகத்தில், செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த ஏப்ரல் 17ம் தேதி சோதனை நடத்தினர். இதில், பணம் ஏதும் சிக்கவில்லை. ஆனால், முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதில், செங்கல்பட்டு வடக்கு உதவி செயற் பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு முறைகேடாக மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சிங்கபெருமாள் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் மின் வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில், புதிய மின் இணைப்புகளுக்கு மனுஅளித்தவர்களிடமிருந்து ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை பணம் வசூல் செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து மின்வாரிய அலுவலர் அசோக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். போர்மேன் ஜோதி என்பவர் திம்மாவரம் மின் வாரிய அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், இளநிலை பொறியாளர்‌ கண்ணப்பன், உதவி செயற்பொறியாளர்‌ சங்கர், ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் 50 மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள். சம்மந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தற்போது, சிங்கபெருமாள் கோயில் பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் மின் இணைப்பு வழங்க, தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு ஆப்பூர் கிராமத்தில் மட்டும் தலா ரூ.45 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு எந்த ஒரு ஆவணம் இன்றி புதிய மீட்டர்கள் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆப்பூர் கிராமம் பாரதிநகர் மலைக்கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 வீடுகளிலும் சிங்கபெருமாள் கோயில் பகுதிகளில் 8 வீடுகளிலும் வழங்கப்பட்ட மின் மீட்டர்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

The post உரிய ஆவணமின்றி தடைசெய்யப்பட்ட அரசு புறம்போக்கு இடங்களில் கட்டிய வீடுகளுக்கு வழங்கிய மீட்டர்கள் பறிமுதல்: மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Dinakaran ,
× RELATED மதுபோதை தகராறில் நண்பனை வெட்டி...