×

பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்தான் என் டார்கெட்!

நன்றி குங்குமம் தோழி

உணவு என்பது வாழ்வாதாரத்திற்கு முக்கியமான ஒன்று என்றாலும், அதை உண்ணும் விதம், அளவு, ஒரு உணவில் இடம்பெற்றிருக்கும் பொருட்கள் என ஒவ்வொன்றும் முக்கியம். இதனை பொருத்துதான் மனிதனுடைய உணர்வுகள், மனநிலை மாறுபடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. உடல் ஆரோக்கியத்திற்கு இணையாக மன ஆரோக்கியத்தையும் சீராக வைத்துக்கொண்டால் மட்டுமே ஒரு மனிதன் முழு நலத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கின்றான் என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

இதனை பல ஆங்கில உணவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கின்றனர். இந்த உணவு முறையினைப் பற்றி மக்களுக்கு புரியும் வகையில் எளிய விளக்க முறைகளுடன் ‘Windows to Mindful Eating’ என்ற புத்தகத்தை எழுதியது மட்டுமல்லாது, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பள்ளியில் இருக்கும் சமையல் கலைஞர்களுக்கும், சில குடும்ப பெண்களுக்கும் உணவுகள் குறித்த வர்க்‌ஷாப்களை நடத்தி வருகிறார் பெங்களூரைச் சேர்ந்த சாந்தி லட்சுமி.

ஆரம்பத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பின் கல்லூரியின் பேராசிரியராகவும் வேலை பார்த்து ஆரோக்கியம், இயற்கை உணவுகள் பற்றி தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்ததோடு இந்த புத்தகம் எழுத அடித்தளமாக இருந்தது என்ன என்பதனை விளக்குகிறார்… ‘‘1999-ல் இருந்து இருபது ஆண்டுகள் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன். அது இயற்கை சார்ந்த பள்ளி. அங்கு ஆரம்ப பள்ளி முதல் நடுநிலை வகுப் புகள் வரை நான் பாடம் எடுத்தேன்.

இதில் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த வகுப்பினை நான் எடுத்து வந்தேன். அந்த பள்ளியின் நிறுவனர், ‘பூமி’ என்ற பெயரில் கல்லூரி ஒன்றை துவங்கினார். இதன் இணை அமைப்பாக துவங்கப்பட்ட ‘பூமி நெட்வொர்க்’ வாழ்வாதாரம், இயற்கை உணவுகள், இயற்கை சார்ந்த வாழ்வியல் பற்றிய வகுப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டது. எனக்கு ஏற்கனவே பல்வேறு வகையான உணவுகள் சமைப்பதில் ஆர்வம் அதிகம். அதனால் பூமி நெட்வொர்க்கில் இணைய விரும்பினேன். என் விருப்பத்தை புரிந்து கொண்டு எனக்கு அந்த வாய்ப்பினை கொடுத்தாங்க. கல்லூரியில் முழு நேரமும் அகாடெமிக் வகுப்புகளும், பூமி நெட்வொர்க்கில் செயல்முறை விளக்கங்களுடன் இயற்கை சார்ந்த பாடங்கள் சொல்லித் தருவோம்.

செயல்முறை கல்வி என்பதால், எங்க கல்லூரி வளாகத்திலேயே நாங்க ஒரு தோட்டம் அமைத்து அங்கு தினசரி தேவைக்கான பொருட்களை எப்படி விளைவிப்பது என்பது குறித்த பயிற்சியும் அளித்தோம். உணவின் அடிப்படை விவசாயம் என்பதால் அங்கிருந்துதான் எங்களின் கற்பித்தல் துவங்கியது. எங்க தோட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள் கொண்டுதான் எங்க மாணவர்களுக்கு உணவு சமைப்பாங்க. மேலும் மற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இங்கு விவசாயம் மற்றும் உணவு குறித்த வர்க்‌ஷாப்களும் நடைபெறும்.

நான் பள்ளிக் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டிருப்பதால், அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடுவாங்க, அவர்களின் உணவுப்பழக்கம் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். எனவே பள்ளிக் குழந்தைகளுடன் வேலை செய்யவும், அவர்களுக்கு தேவையான ஆரோக்கிய உணவுகளை எப்படி கொடுக்கலாம் என்பதை குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் இணைந்து செயல்பட விரும்பினேன். 2015-ல் ‘Sankalpa Towards Conscious Eating” என்னும் அமைப்பை உருவாக்கினேன். இந்த அமைப்பு மூலமாக முழுக்க முழுக்க ஆரோக்கியமான உணவுகளை சமைக்கும் முறை குறித்து பல்வேறு இடங்களுக்கு சென்று விளக்க ஆரம்பித்தேன்’’ என்ற சாந்தி லட்சுமி, தன்னுடைய அமைப்பில் கற்பிக்கப்படும் விஷயங்களை பற்றி விளக்கினார்.

‘‘சங்கல்பா ஆரம்பித்த பிறகு பெங்களூர், ஆந்திரா மற்றும் சென்னையில் உள்ள பல பள்ளிகளுக்கு என் அமைப்பு சார்பாக உணவு குறித்த வர்க்‌ஷாப்பினை நடத்தி இருக்கேன். அதில் பாடசாலா பள்ளியில் குழந்தைகள் தங்கி படிப்பதால் அவர்களுக்கான காலை முதல் இரவு வரை அவர்கள் சாப்பிடும் உணவுகளில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தேன். பொதுவாகவே ஆரோக்கியமான உணவுகள் சுவையாக இருக்காது என்று பலர் நினைக்கிறார்கள்.

அதனால் அவர்களின் உணவுகளை முழுவதும் மாற்றாமல் காலை ஒரு சிறுதானிய உணவு மற்றும் சாலட் வகைகளை கொண்டு வந்தோம். மற்ற உணவுகள் எல்லாம் அவர்கள் தினசரி சாப்பிடும் உணவுகள்தான். மாதம் ஒரு முறை என்று இரண்டு ஆண்டுகளுக்கு இங்கு சமையல குறித்த வர்க்‌ஷாப்பினை நடத்தினேன். அதில் எந்த உணவுகளை எப்படி சமைக்கணும், எந்தெந்த உணவுக்கு என்ன பொருட்களை சேர்க்கணும் என்று சொல்லிக்கொடுப்பேன். சில பள்ளிகளில் சமையல் கூடம் இருக்காது. அங்கு பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு உணவு முறைகளை பற்றி விவரிப்பேன். உணவு என்றால் சாதம், குழம்பு, கூட்டு, பொரியல் மட்டுமில்லை. காய்கள், பழங்கள் கொண்ட சாலட்கள், சூப்கள், சிறுதானிய உணவுகள் என அனைத்தும் இருக்க வேண்டும். என்னுடைய டார்கெட் ஆடியன்ஸ், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்தான்.

ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளுக்கு பலவித செயல்வழி கல்விமுறையினை தற்போது பின்பற்றி வருகிறார்கள். அதில் குறிப்பாக மான்டசரி பள்ளிகளில் அனைத்து பாடங்களையுமே செயல்வழி கல்வி முறையில்தான் சொல்லித் தருவார்கள். அதில் சமையல் கலையில் காய்கறிகள் வெட்டுவது முதல் சமைத்த உணவுகளை பகிர்ந்து கொள்வது என அனைத்தும் அடங்கும். குழந்தைகள் பள்ளியில் இதனை கற்றுக் கொண்டாலும், வீட்டில் சமையல் அறைக்குள் பெற்றோர்கள் அவர்களை அனுமதிப்பது கிடையாது.

அதனால் நேரடியாக பெற்றோர்களுக்கே இதற்கான பயிற்சி அளித்தேன். அதில் குழந்தைகளுக்கு உணவுகள் தவிர உணவு சம்பந்தப்பட்ட சின்னச் சின்ன விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை புரிய வைத்தேன். ஃபுட் லேபிலிங்க், ஒரு உணவுப் பொருளில் சேர்க்கப்பட்டுள்ள இதர பொருட்களின் அளவை பொறுத்து அது ஆரோக்கியமானதா இல்லையா என்பதனை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பேன்’’ என்றவர் புத்தகம் எழுத காரணம் பற்றி விவரித்தார்.

‘‘பொதுவாக வர்க்‌ஷாப் என்றால் பள்ளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு மட்டும்தான் எடுக்க முடியும். இதனை அனைத்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துச் செல்ல நினைத்தேன். அந்த எண்ணம்தான் புத்தகம் எழுதத்தூண்டியது. என் உணவு ரெசிபிகள், உணவு சமைக்கும் முறை என அனைத்தையும் என் புத்தகத்தில் பதிவு செய்ய விரும்பினேன்.

அதில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் கைகளால் வரையப்பட்டவையாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்கிடையில் கொரோனா காரணமாக என்னுடைய புத்தக வேலை தாமதமானது. 2023-ல் எப்படியாவது இந்த புத்தகம் வெளிவரவேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருந்தேன். என் ரெசிபிகளுக்கான புகைப்படம் வரைவது, என்னுடைய எண்ணங்களை எழுத்துகளாக மாற்றி புத்தகமாக கொண்டு வர அந்தரா முகர்ஜி, ப்ரதீபா, பிரக்யா இவர்கள் மூவரும்தான் உதவி செய்தாங்க. இப்படித்தான் என் புத்தகம் கடந்த ஆண்டு வெளியானது.

ரெசிபி எல்லாம் ஒன்றுதானே, அதில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறதுன்னு நிறைய பேர் கேட்டாங்க. என்னுடைய புத்தகத்தை “உடல் நுண்ணறிவு மற்றும் உடலின் இயற்கை சுழற்சிகள் (body intelligence and natural cycles of the body), அன்றாட உணவில் சிறுதானியங்கள் (millets in our daily meals), ஆரோக்கிய சமையல் அறை மற்றும் வாழ்க்கை (reimaging kitchen & reimaging healthy live) என மூன்று பகுதிகளாக பிரித்திருக்கேன். முதல் பகுதி, நம் உடலில் நடக்கக்கூடிய வேலைகள், அதில் இயற்கையாக நடக்கும் சுழற்சி முறைகள், தொடர்ந்து செயல்படுவதற்கான உணவுகள், நம் உடலில் உள்ள PH அளவினை பராமரிக்கும் உணவுகள் குறித்து குறிப்பிட்டிருக்கேன்.

இரண்டாவது பகுதியில் தினசரி உணவில் சிறுதானியங்களை எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விளக்கியிருப்பேன். நம்முடைய தினசரி உணவில் அரிசிதான் அதிக அளவு இருக்கும். அதில் பாதியளவு சிறுதானியம் சேர்த்து உணவுகளை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை பற்றி இந்தப் பகுதியில் ரெசிபிகளாக தொகுத்திருப்பேன். பொதுவாக பால் சார்ந்த உணவுகள் உண்பதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. அதற்கு மாற்று என்ன என்பதை குறிப்பிட்டிருக்கேன்.

கடைசி பகுதியில் நம்முடைய சமையல் அறையை ஆரோக்கிய முறைக்கு எப்படி மாற்றலாம் என்று விளக்கி இருக்கேன். நானும் ஆரம்பத்தில் விருப்பப்பட்ட உணவுகளை விருப்பப்பட்ட நேரத்தில் வாங்கி சாப்பிட்டிருக்கேன். என் சமையல் அறையிலும் பல்வேறு பேக்ட் உணவுகள் இருக்கும். இயற்கை மற்றும் ஆரோக்கிய உணவுகள் பக்கம் என் பார்வை மாறியதும், என் சமையல் அறையில் உள்ள பொருட்களும் மாற்றப்பட்டது. அது போல மற்றவர்களும் தங்களின் சமையல் அறையை ஆரோக்கியமாக எப்படி மாற்றலாம் என்று டிப்ஸ் கொடுத்திருக்கேன்.

இந்த உணவுமுறையினை அனைவருக்கும் கொண்டு சேர்க்கணும் என்பது தான் என் இலக்கு. அதனால்தான் என் அமைப்பு மூலமாக பள்ளிக் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவருக்கும் 60 வருட பழமையான சமையல் ரெசிபிகளை சொல்லிக் கொடுத்தது மட்டுமில்லாமல் அவர்களை அதனை சமைக்கவும் வைக்கிறேன். சிறுதானியங்களை கொண்டு 6000 வகையான உணவு பதார்த்தங்களை செய்ய முடியும்’’ என்ற சாந்தி லட்சுமி, புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள முறையில் உணவுகளை சமைத்து உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்தான் என் டார்கெட்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED கேஸ் விலை உயர்வு… சிக்கனத்துக்கு சில வழிகள்!