×
Saravana Stores

கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார் சசிகலா!

நீலகிரி: கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க சசிகலா அடிக்கல் நாட்டினார். ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார். மணிமண்டபம் அமைய உள்ள இடத்தில் நடந்த பூமி பூஜையில் சசிகலா பங்கேற்றார். சசிகலா, இளவரசியின் குடும்ப உறுப்பினர்களும் பூமி பூஜையில் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட் உள்ளது. நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த சசிகலா அங்கிருந்து சாலை மார்க்கமாக கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்தடைந்தார்.

அப்போது, கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிபவர்களை பார்ப்பதற்க்காகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை செய்வதற்காவும் வருகை புரிந்ததாக தெரிவித்தார். இந்நிலையில், இன்று (ஜன.19) கோடநாடு எஸ்டேட் பகுதியில் உள்ள கோடநாடு காட்சிமுனைக்கு செல்லக்கூடிய பிரதான சாலை அருகே 10ம் எண் நுழைவு வாயில் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலை நிறுவுவதற்கும், மணிமண்டபம் அமைப்பதற்கும் சசிகலா அவரது குடும்ப உறுப்பினர்கள், கோடநாடு எஸ்டேட் மேலாளர் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா; நான் இதுவரை அம்மா ஜெயலலிதா இல்லாமல் தனியாக கோடநாடு வந்ததில்லை. அவர் இல்லாமல் நான் எப்படி அங்கு தனியாக செல்வது என்ற தயக்கத்தாலேயே இங்கு வராமல் இருந்தேன். ஏனெனில், கோடநாடு அவருக்கு மிகவும் பிடித்த இடம். இங்கு பணியாற்றும் பணியாளர்கள் எங்கள் இரண்டு பேரிடமும் அன்பாகப் பழகுவார்கள். தொழிலாளர்கள் என்று அம்மா ஜெயலலிதா பாரபட்சம் பார்த்ததில்லை. இங்கு வரும்போதெல்லாம் அவர் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்துக்கே சென்று அவர்களிடம் சகஜமாகப் பழகி உள்ளார்கள்.

ஒரு குடும்பப் பெண் எப்படி இருப்பார்களோ அதேபோல்தான் கோடநாடு வந்தால் ஜெயலலிதா இருப்பார். இது அவருக்கு ரொம்ப பிடித்த இடம் என்பதால் சாஸ்திரப் படியும், வாஸ்துப் படியும் இந்த இடத்தை தேர்வு செய்து சிலை நிறுவி, மணி மண்டபம் கட்ட பூமி பூஜை செய்யப்பட்டது. குறிப்பாக கோடநாடு காட்சிமுனை சுற்றுலா தலமாக இருப்பதால் அனைத்து மக்களும் வந்து பார்த்து செல்லும் அளவுக்கு மணி மண்டபம், சிலை அமைக்கப்படும். அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும். இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும், ஆகஸ்ட் மாதத்துக்குள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார் சசிகலா! appeared first on Dinakaran.

Tags : Sasikala ,Jayalalithaa ,Godanadu Bungalow ,Nilgiri ,Godanadu Bangla ,Bhumi Pooja ,Manimandapam ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு