×

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் பகுதியில் சம்பா சாகுபடி நாற்று நடும் பணி தீவிரம்

* சொந்தமாக பாய் நாற்றங்கால் தயாரிக்கப்படுகிறது

* இடுபொருட்கள் கிடைக்க நடவடிக்கை தேவை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் பகுதியில் சம்பா சாகுபடிக்காக நாற்று நடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குறுவை அறுவடை முடிந்துள்ள நிலையில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் தங்கள் நிலங்களை தண்ணீர் விட்டு உழவு செய்தும் நாற்றாங்கால் தயார் செய்தும் வந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம், பூண்டி, மாரியம்மன் கோவில், கோவிலூர், புலவர் நத்தம் உள்ளிட்ட பகுதியில் சம்பா சாகுபடிக்காக நாற்று விட்டு அதை பறித்து நடும் பணிகளில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தீவிரம் காட்டினர். தமிழகத்தின் நெல் களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சம்பா தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.

காவிரி டெல்டா பாசத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது அனைத்து ஏரி குளங்களிலும் தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக வயல்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வயலில் உள்ள களைகள் அப்புறப்படுத்தப்பட்டு டிராக்டரை கொண்டு உழும் பணிகளிலும், ஒரு சில இடங்களில் நாற்றங்காலை பறித்து நடவு பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் வயலில் எரு அடிப்பதும், வயலை உழுது தயார் செய்வது போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

சம்பா சாகுபடி பொருத்தவரையில் விவசாயிகள் நீண்ட நாட்கள் ரகமான நெல்லை தான் சாகுபடி செய்வார்கள். விவசாயிகள் பலரும் பாய்நாற்றங்கால் சாகுபடியும் சில விவசாயிகள் நாற்று விடும் பணிகளிலும் ஈடுபட்டனர்.இதனால் விவசாய பணிகள் தஞ்சாவூர் பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 3.45 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 2.10 லட்சம் ஏக்கர் அளவிற்கு சம்பா பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு பக்கம் கல்லணை கால்வாய் மறுபுறம் வெண்ணாறு ஆற்றுப் பாசனத்தை நம்பிய விவசாயிகள் உள்ளனர். ஒரு சிலர் பம்பு செட்டு வைத்து முப்போகம் சாகுபடி செய்கின்றனர். தற்போது ஆறுகளிலும், வாய்க்கால்களிலும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் சம்பா சாகுபடியை தொடங்கியுள்ளோம். வயலில் உள்ள களைகளை முழுமையாக அகற்றி உழுது தயார்படுத்தி தண்ணீர் தேக்கி உள்ளோம். இதனால் வயல்களில் காற்றோட்டம் நன்கு இருக்கும். வயலில் நாற்று நடும்போது மிகவும் எளிதாக இருக்கும்.

சிலர் நாற்று நடும் பணிகளிலும் சிலர் பாய் நாற்றங்கால் வாங்கி நடும் பணிகளிலும் இறங்கி உள்ளனர். ஒரு சிலர் நாற்றங்காலை பறித்து நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தஞ்சை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், இந்த மழை விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது. எந்திரத்திற்கான வாடகை உயர்ந்துவிட்டது.

கடந்த ஆண்டு ஏக்கருக்கு ரூ.2,500-க்கு இருந்த வாடகை இந்த ஆண்டு டீசல் விலை உயர்வால் ரூ.300வரை உயர்ந்துவிட்டது. சொந்தமாக எந்திரம் வைத்திருப்பவர்கள் ஆட்கள் கூலி மட்டும் கொடுக்கின்றனர். ஆனால் வாடகைக்கு எடுப்பவர்கள் ஆட்கள் கூலி, வாடகை என கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு செலவு கூடிவிட்டது. சொந்தமாக பாய் நாற்றங்கால் தயாரித்து நடுகிறோம் எங்களுக்கு நடவு முடிந்த பின்னர் வரும் மீதி நாற்றங்காலை விற்பனை செய்து விடுவோம்.

விவசாயிகள் பணிகளை செய்ய தொடங்கியுள்ளதால் இடுபொருள்கள் அனைவருக்கும் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் விதை நெல் குறைந்த விலையில் தனியார் விற்பனையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும் என்றார்.

The post தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் பகுதியில் சம்பா சாகுபடி நாற்று நடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chaliyamangalam ,Thanjavur district ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் 3...