×

சேலம் அருகே மாட்டை கொன்ற சிறுத்தை கேமராவில் சிக்கியது

சேலம்: சேலம் அருகே மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை வனத்துறையினர் வைத்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. அந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து வன ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரில் கடந்த 5 மாதத்திற்கும் மேலாக ஒரு சிறுத்தை சுற்றி வருகிறது. டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட காடையாம்பட்டி வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்கு வந்த சிறுத்தை, ஆடு, மாடுகளை அடித்துக் கொன்றது. பின்னர், மேச்சேரி பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அந்த பகுதியிலும் வனத்தை ஒட்டிய கிராமத்திற்கு வந்து மாட்டை அடித்துக் கொன்று சாப்பிட்டுச் சென்றது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் இடைப்பாடி அருகேயுள்ள பக்கநாடு ஊராட்சி கோம்பைக்காடு பகுதிக்கு சிறுத்தை வந்தது. அங்கு மாதையன் என்பவரது வீட்டில் கட்டப்பட்டிருந்த மாட்டை அடித்துக் கொன்று, சுமார் 200 அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று சாப்பிட்டது.

இதையடுத்து அப்பகுதியில் 13 இடங்களில் சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் வைத்தனர். மீண்டும் அந்தப்பகுதிக்கு வந்த சிறுத்தை, அந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. அக்காட்சிகளை கொண்டு, ஏற்கனவே டேனிஷ்பேட்டை, மேச்சேரி பகுதிக்கு வந்த அதே சிறுத்தைதான் என்பதை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதையடுத்து தற்போது, பக்கநாடு கோம்பைக்காடு பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். அந்த கூண்டிற்குள் ஆட்டை கட்டி போட்டு வைத்துள்ளனர். அதனால், மீண்டும் அந்த பகுதிக்கு சிறுத்தை வந்தால் கூண்டில் சிக்கும் என வனத்துறை ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

The post சேலம் அருகே மாட்டை கொன்ற சிறுத்தை கேமராவில் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Salem ,Servarayan ,
× RELATED சேலம் பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை..!!