×

அமுதமுமாய் வான் அந்தமான வடிவுடையாள்

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

“அன்றே உனதென்று அளித்துவிட்டேன்”

தீட்சை செய்து கொள்ளும் மாணவன் தனது உடல், உடைமை மற்றும் உயிர் இவற்றை குருவிற்கு அர்ப்பணித்துவிட வேண்டும் என்று ஆச்சாரிய விதி படலத்து உள்ள கருத்தை நமக்கு விளக்கி சொல்கிறார் பட்டர். இதையே ‘சரணம் சரணம் எனநின்ற நாயகி’ (51) என்பதனால் அறியலாம். ஆச்சாரியனை குறித்து சிஷ்யன் நமஸ்காரம் செய்வது. சிஷ்யன் என்ற சொல்லிற்கு கட்டுப்படுத்தபட்டவன், சுதந்திரமாக இருக்க இயலாதவன், ஆச்சாரிய சிந்தனைக்கே தன் செயல்பாடுகளை கொண்டவன் என்பது பொருள்.

இதையே ‘‘அன்றே உனதென்று அளித்து விட்டேன்” என்பதனால் குறிப்பிடலாம். மேலும் அபிராமி பட்டர் தனது குருவை அபிராமியாகவே கருதுவதால் தீட்சை எடுத்துக் கொண்ட போதே தன் உடைமை எல்லாம் உன்னிடத்திலே அளித்துவிட்டேன் இனி அளிக்க வேண்டியது ஒன்றும் இல்லை என்று உமையம்மைக்கு குரு வடிவில் தன்னை ஆட்கொண்டதை நினைவு படுத்துகிறார். இப்பொழுதே அளித்தேன் என்று குறிப்பிடவில்லை ‘முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்’ (25) என்பதனால் நன்கு அறியலாம். இதையே “அன்றே உனதென்று அளித்து விட்டேன்” என்கிறார்.

“அழியாத குணக்குன்றே’’
என்பதனால் மனிதர்களைப் போல் ஒருநாள் நன்றாக பழகி மறுநாள் அவ்வாறு பழகாமல் முகம் காட்டுகிற பண்பு உமையம்மையிடத்தில் இல்லை. மனிதர்களிடத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இயல்பை உடையவள் உமையம்மை. மனிதர்கள் சரீர குணத்தைக் கொண்டவர்கள், உமையம்மையோ ஆத்ம குணத்தை கொண்டவள்.

மனிதர்கள் கருணையைப் பெற விரும்புவர். உமையம்மையோ தர விரும்புகிறாள். உமையம்மை பற்றிய குணங்கள் சிலவற்றை காண்போம். ‘பேர் அருள்கூர்’ (9) என்று கருணையை குறிப்பிடுகிறார். ‘ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய் வான் அந்தமான வடிவுடையாள்’ (11) இந்த மூன்று பண்புகளும் உமையம்மைக்கு உடலாகவே இருக்கிறது. ‘சந்திப்பவர்க்கு எளிதாம்’ (14) என்று உமையம்மையின் எளிமைப் பண்பை குறிப்பிடுகிறார்.

உமையம்மை துன்பத்திற்கு மருந்து போன்றவள் என்பதை ‘அருமருந்தே’ (25) வலிய வந்து உயிர்களை தானே நேசம் செய்பவள் ‘வலிய வைத்து ஆண்டு கொண்ட’ (32) உமையம்மை கொடை குணம் கொண்டவள் ‘வந்தே சரணம் புகும் அடியார்க்கு வானுலகம் தந்தே’ (34) என்பதனால் அறியலாம் என்று பல குணங்களை கூறிய பட்டர் ‘நல்லன எல்லாம் தரும்’ (69) என்று குறிப்பிட்டு கூறவே “அழியாத குணக்குன்றே” என்கிறார்.

“அருட்கடலே”என்பதனால் உமையம்மை கருணையே வடிவாக இருக்கிறாள். அந்த கருணையின் அளவு சார்ந்து ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவள் என்பதையே “அருட்கடலே” என்கிறார். இதைத் தன் அனுபவத்தில் கூறினாலும் சாத்திரத்தில் கூறியுள்ள உண்மையையே குறிப்பிடுகிறார். ‘கருணா ரச சாகராயை’ என்ற சஹஸ்ர நாமத்தால் இதை நன்கு அறியலாம். மேலும் மேலும் தான் தவறு செய்தாலும், வெறுக்கும்படி செய்தாலும், வேண்டுமென்றே செய்தாலும் உமையம்மையானவள் தாய்போல் குற்றம் குறை பாராமல் தானே வேண்டாமலே வந்து அருள்வாள். அதனாலேயே ‘‘அருட்கடலே” என்கிறார். மேலும் இறையருள் பெற தவம், விரதம், பூஜை, ஆச்சாரம், போன்ற கடுமையான பயிற்சிகளை கொண்டு தான் அடைய வேண்டும் என்று இல்லாமல் உண்மையான அன்பு கொண்டு அழைத்தாலே அருள் செய்வதால் ‘‘அருட்கடலே” என்கிறார்.

“இமவான் பெற்ற கோமளமே’’ “இமவான்” என்ற பர்வதத்தின் வம்சத்தில் பிறந்ததால் குலப்பெயரான பர்வத என்ற சொல்லினின்றும் வந்த பார்வதி என்ற பெயரை இட்டு அவளை அன்புள்ள உறவினர்கள் அழைத்தனர். மேலும் உமையம்மையானவள் தான் எந்த குலத்தில் தோன்றுகிறாளோ அந்த குலத்தை வளமடையச் செய்வாள், அது மட்டுமல்லாமல் அந்த குலத்தின் பண்பையே தான் பெற்றிருப்பாள்.

அந்த வகையில் “இமவான்” என்ற மலையரசனானவன் குல பண்பை தான் பெற்றிருக்கிறார். அந்த மலையில் தேவர்களும் ரிஷிகளும் தவம் செய்கிறார்கள். ஆகையினால் முக்தி நலம் அருளக் கூடியவள் அந்த மலையில் பலவகை தாதுப்பொருள்களும் ரத்தினங்களும் மருந்து வகை மரங்களும் யாகத்திற்கு வேண்டிய பொருள்களை தருவதால் யாகத்தில் ஹவிர் பாகம் பெரும் உரிமை அவனுக்கு இருந்தது.

பார்வதியின் தாயோ பித்ருக்களின் மானச புத்திரி என்ற காரணங்களால் அந்த குலத்தில் தோன்றிய பார்வதி தவம் செய்வதால் மோட்சத்தையும் ரத்தினம் தருவதால் மகிழ்ச்சியையும், ஔஷதம் தருவதால் வியாதி நீக்கத்தையும், பித்ருக்களுக்கு அருளுவதால் ஆத்மஞானத்தையும் யக்ஞத்திற்கு தேவையான சோமலதையை அளிப்பதால் விரும்பிய பலனையும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் முயற்சியின்றி அளிப்பது தன் குலத்தின் இயல்பாகவே அமைந்துள்ளது. ஆகவே அபிராமி பட்டர் இமவானின் புதல்வியாக இங்கே கூறியது சரியான பொருத்தமுடைய காரணத்தினாலேயே ‘‘இமவான் பெற்ற கோமளமே” என்கிறார்.

“அந்தமாக”“நன்றே வருகினும் தீதே விளைகினும்’’ என்பதனால் உபாசனை செய்பவர்களுக்கு தோன்றும் நல்ல மற்றும் தீய விளைவையும் குறிப்பிட்டு, “நான் அறிவது ஒன்றேயும் இல்லை’’ என்பதனால் சீடனானவன் முழுவதுமாக ஞானம் பெறாத நிலையிலும் பெற்ற நிலையிலும் குருவையே தன் செயல் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக்குகிறார் என்பதையும், “உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்’’ என்பதால் குரு சிஷ்ய தொடர்பினால் சீடனுக்குள் ஏற்படும் ஞானத்தையும் சீடனானவன் குருவின் இடத்து முழுவதுமாய் சரணடைந்த பண்பையும், “அன்றே உனதென்று அளித்து விட்டேன்’’ என்பதனால் மந்திரசித்தி பெறும் நாளில் முன்னதாகவே தான் சரணடைந்த பண்பை உமையம்மைக்கு அறிவுறுத்தியும்,

அப்படி அறிவுறுத்துவதால் உமையம்மையின் அருளை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் பண்பையும், “அழியாத குணக் குன்றே’’ என்பதனால் உமையம்மையின் மாறுபடாத சத்தியத் தன்மையை சுட்டிக் காட்டியும்,“அருட்கடலே’’ என்பதனால் அருள் செய்ய வேண்டியும்,“இமவான் பெற்ற கோமளமே’’ என்பதனால் பிறப்பிலேயே கொடைக் குணத்தை இயல்பாக பெற்ற பர்வத கல்யாணியை அழைத்து அருள் பெற கல்யாண பார்வதியை வேண்டுகிறார். நாமும் அவளின் அருளைப்பெற முயல்வோம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அமுதமுமாய் வான் அந்தமான வடிவுடையாள் appeared first on Dinakaran.

Tags : Amudhamumai Van Andamaana Vaviduyal ,Abhirami Andathati ,Shakti ,Bhattar ,
× RELATED கிறிஸ்துமஸை வரவேற்போம்!