×

ரஷ்யாவில் ராணுவ கிளர்ச்சி உக்ரைன் வீரர்கள் மகிழ்ச்சி: போர்க்களத்தில் புதிய நம்பிக்கை

கீவ்: ரஷ்யாவில் ஏற்பட்ட ராணுவ கிளர்ச்சியால் உக்ரைன் ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போர்க்களத்தில் அவர்கள் புதிய நம்பிக்கை பெற்றுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் ஒன்றரை ஆண்டாக நீடிக்கிறது. இதில் உக்ரைன் பல நகரங்களை இழந்துள்ளது. பெரும்பாலான நகரங்கள் நாசமாகி உள்ளன. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தரும் ஆயுத உதவியால் இன்னமும் ரஷ்யாவிடம் சரணடையாமல் உக்ரைன் போரிட்டுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, ரஷ்ய ராணுவம் ஒப்பந்த முறையில் நியமித்த வாக்னர் எனும் தனியார் ஆயுதம் ஏந்திய கூலிப்படை ரஷ்யாவுக்கு எதிராக திரும்பியது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்குவை நீக்க வேண்டுமென வலியுறுத்தி, மாஸ்கோ நோக்கி வாக்னர் படையினர் அணிவகுப்பு நடத்தினர். தலைநகர் மாஸ்கோவை 200 கிமீ தூரத்தில் நெருங்கிய நிலையில், சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் திரும்பிச் செல்வதாக வாக்னர் படையின் தலைவர் பிரிகோஜின் அறிவித்தார்.

இதனால் 24 மணி நேரத்தில் ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. ஆனாலும், தேச துரோகி என பிரிகோஜினை தாக்கி பேசிய ரஷ்ய அதிபர் புடின், தலைநகரை பாதுகாக்க அவரிடமே சமாதானப்பேச்சு நடத்தியது பெரும் விவாதமாகி உள்ளது. இதனால் புடின் பலவீனமாக இருப்பதாக சர்வதேச வல்லுநர்கள் கூறி வருவது, யுத்தம் நடக்கும் உக்ரைனுக்கு புதிய மன உறுதியை அளித்துள்ளது. உக்ரைன் ராணுவ செய்தி தொடர்பாளர் செர்ஹி செரிவடி கூறுகையில், ‘‘போர் களத்தில் எங்களின் முன்கள வீரர்கள் புதிய நம்பிக்கை பெற்றுள்ளனர். எதிரி கூடாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமும், சீர்கேடும் எங்களுக்கு நன்மை பயக்கும். ஆயுத கிளர்ச்சி குறுகியதாக இருந்தாலும் இது போர் களத்தில் ரஷ்யாவின் கவனத்தை திசை திருப்பி உள்ளது. மேலும் நீண்ட காலமாக ரஷ்ய போர் படைகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாததையும் இது காட்டுகிறது. எனவே அனைத்து வகையிலும் இது எங்களுக்கு சாதகமானது’’ என்றார். இதுவரை தங்களை தற்காத்து மட்டுமே வந்த உக்ரைன், ரஷ்யாவுக்கு எதிராக பதில் தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில், ரஷ்யாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது உக்ரைன் போரில் பெரும் திருப்புமுனையாக அமையவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

* பாதுகாப்பு அமைச்சர் உக்ரைன் சென்றார்

ராணுவ கிளர்ச்சிக்கு முக்கிய காரணமே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு தான். இவருக்கு எதிராகத்தான் வாக்னர் படை மாஸ்கோ நோக்கி முன்னேறியது. தற்போது கிளர்ச்சி முடிவுக்கு வந்த பிறகு, முதல் முறையாக பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு பொது வெளியில் தோன்றினார். அவர் உக்ரைன் போர் களத்திற்கு புறப்பட்ட வீடியோவை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவத்துடன் கடந்த வார நிலவரம் குறித்தும் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஷோய்கு ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளர்ச்சி முடிவுக்கு பிறகு இதுவரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பொது வெளியில் தோன்றவில்லை.

The post ரஷ்யாவில் ராணுவ கிளர்ச்சி உக்ரைன் வீரர்கள் மகிழ்ச்சி: போர்க்களத்தில் புதிய நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Kiev ,Russia ,Dinakaran ,
× RELATED உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவின் நவீன போர் விமானம் சேதம்