×

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் வரும் 28ம் தேதி முதல் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்: பொது சுகாதாரத்துறை தகவல்


சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் வரும் 28ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 9 மாதம் முதல் 15 வயது வரையிலான இளம் சிறார்களுக்கு வைரஸ் பரவாமல் இருக்க தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய பகுதிகளில் அதீத மழை கொட்டி தீர்த்து வெள்ளம் ஏற்பட்டது.

தற்போது மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசு சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அத்துடன் வரும் 28ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தப்படும் என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொதுசுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது: கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் தற்போது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 15 வயதுக்குட்பட்டோருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணி வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது.

பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் மொத்தம் 8 லட்சம் சிறார்களும், குழந்தைகளும் உள்ளனர். இதில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது . ஒன்றிய அரசு 10 லட்சம் தவணை தட்டம்மை தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. எனவே, போதிய எண்ணிக்கையில் அவை கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் வரும் 28ம் தேதி முதல் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : southern districts ,Public Health Department ,Chennai ,southern ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்...