×

நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மூலம் ரூ3 லட்சம் கோடி மோசடி: முறைகேடுகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு முறை அமலாகிறது

டெல்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையில், இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் வரி ஏய்ப்பின் மூலம் இதுவரை ரூ. 3 லட்சம் கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசு அமல்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி), தொழில் துறையினரின் ​​வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக அதன் பதிவு அமைப்பில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. அவ்வப்போது புதிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. ஆரம்ப காலகட்டங்களில், ஜிஎஸ்டி மதிப்பீடு தொடர்பாக சில குழப்பங்கள் இருந்தன. பொருட்களின் மீதான வரிகளை தீர்மானிப்பதற்காக, நாடு தழுவிய ஜிஎஸ்டி கவுன்சில் பலமுறை கூட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.

தொடக்கத்தில், ஜிஎஸ்டி வரி விகிதம் எந்தப் பொருளுக்கும் பதினெட்டு சதவீதத்திற்கு மேல் வைக்கப்படாது என்றும், வரும் ஆண்டுகளில் இந்தக் கட்டணங்கள் குறைக்கப்படும் என்றும் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் ஆரம்ப ஆண்டுகளில் இது பல பொருட்களில் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. பின்னர் அவை குறைக்கப்பட்டன. இப்போதும் 18 சதவீதம் என்ற இலக்கு பின்பற்றப்படவில்லை. இதனால், பல வர்த்தகர்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அதிகமாகவே தெரிகிறது. ஜிஎஸ்டி வரி செலுத்தும் முறைகள் சிறு வணிகர்களுக்கு தெரியாததால், அவர்கள் பட்டய கணக்காளரின் உதவியை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் அவர்களுக்கு மாதந்தோறும் கூடுதல் செலவாகி வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், வணிகர்கள் வரி ஏய்ப்புக்காக போலி ஜிஎஸ்டி கணக்குகளைத் தொடங்கினர். போலி நிறுவனங்களை தொடங்குவது மட்டுமின்றி, போலி ஆதார் அட்டைகளை உருவாக்கி, போலியாக ஜிஎஸ்டி பதிவு செய்யத் தொடங்கினர். இந்த வழியில் சிலர் கொள்முதல் மற்றும் விற்பனை கணக்குகளை தாக்கல் செய்தனர். ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த காலகட்டத்தில் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

அதாவது, ஜிஎஸ்டி வரிஏய்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் வரி ஏய்ப்பு நிறுத்தப்படவில்லை. இன்றைய நிலையில் ஜிஎஸ்டி மாத வசூல் ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது. வரி ஏய்ப்பை மேலும் கட்டுப்படுத்தினால் வரிவசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியதன் நோக்கம் என்னவென்றால், வணிகர்கள் வெவ்வேறு வரிகளைச் செலுத்துவதில் இருந்து நிவாரணம் அளிப்பதற்காக தொடங்கப்பட்டது.

இதன் மூலம் உற்பத்திச் செலவு குறைக்கப்பட்டு அதன் நேரடிப் பலன் நுகர்வோருக்குக் கிடைக்கும் வகையில் வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இந்நிலையில் வரி ஏய்ப்பை தடுப்பதற்காக தற்போது ஜிஎஸ்டி பதிவு அமைப்பில் செயற்கை நுண்ணறிவு முறையை பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை கட்டுப்படுத்த முடியும் என்று நிதித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post நாடு முழுவதும் கடந்த 6 ஆண்டில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மூலம் ரூ3 லட்சம் கோடி மோசடி: முறைகேடுகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு முறை அமலாகிறது appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...