×

கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருப்பணிகள் – அரசு நிதிக்கான வரைவோலைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருப்பணிகளுக்கு அரசு நிதிக்கான வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து புதிய உத்வேகத்துடன் இந்து சமய அறநிலையத் துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

2021 – 2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தலா ஒரு லட்சத்தை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அதன் எண்ணிக்கையை தலா 1,000- லிருந்து 1,250 ஆக உயர்த்தியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் 2,500 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 2,500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 100 கோடி ரூபாய்க்கான வரைவோலைகள் முதலமைச்சர் அவர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டது.

இவற்றில் 1,085 கிராமப்புறத் திருக்கோயில்கள், 1,070 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் என 2,155 திருக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதர திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு கால பூஜைத் திட்டத்தில் ஏற்கனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 17,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருவதோடு, முதன் முறையாக அதன் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு கூடுதலாக 1,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவதோடு, வைப்பு நிதியை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.50 இலட்சமாக உயர்த்தி வழங்கிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2023-2024 ஆம் நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை முதலமைச்சர் இன்று திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார்.

இதன்மூலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும்.  முதலமைச்சர் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வரும் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியினை ரூ.2.50 லட்சமாக உயர்த்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், இணை ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் திருப்பணிகள் – அரசு நிதிக்கான வரைவோலைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Adi Dravidian ,CHENNAI ,Hindu Religious Charitable Department ,
× RELATED தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்...