×

முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை பெறுதற்கான ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.8.2024) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருடைய ஆராய்ச்சி திறனை மேம்படுத்திடவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்திடவும் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியர்களுக்கு ஆராய்ச்சி படிப்பைத் தொடர மாதம் ரூ.25,000/- ஊக்கத் தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி. புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் இடைநிற்றலின்றி உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டம், அதேபோன்று மாணவர்கள் உயர்கல்வி பயின்றிட “தமிழ்ப் புதல்வன்” திட்டம். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் 30.8.2022 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர், “நம்முடைய மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் (CM Research Fellowship) “முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை” திட்டம் தொடங்கப்படும். இதற்கான மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்” என்று அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருடைய ஆராய்ச்சி திறனையும். புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்கப்படுத்திடும் வகையில், முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில் பயன்பெற்றிட ஆராய்ச்சி மாணவர்களை தெரிவு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு 10.12.2023 அன்று நடத்தப்பட்டு, 120 மாணவ, மாணவியர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் 60 மாணவர்கள் அறிவியல் பாடப் பிரிவையும், 60 மாணவர்கள் கலை, மானுடவியல் மற்றும் சமூகவியல் பாடப் பிரிவையும் சார்ந்தவர்கள் ஆவார்கள். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியர்கள் தங்கள் ஆராய்ச்சி படிப்பினை அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடர மாதம் ரூ.25,000/- ஊக்கத் தொகையாக மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 12.31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவ, மாணவியர்களில் 10 மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கான ஆணைகளை இன்று வழங்கினார். இத்திட்டம், தமிழ்நாடு உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பயின்று ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப.. கல்லூரி கல்வி இயக்குநர் எஸ். கார்மேகம், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை பெறுதற்கான ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : K. Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Higher Education Department ,Principal ,M.U. K. Stalin ,Dinakaran ,
× RELATED பெரியாரின் 146ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் மரியாதை